தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் ரசிகர்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. அவற்றுள் சில நடிகைகளே தங்களது திறமைகளை வெளிகாட்டும் கதைகளைத் தேர்வு செய்து, நடித்து வருகின்றனர்.
இதில் குறிப்பிட்டு பேசப்படவேண்டிய நடிகையாக ஜோதிகா திகழ்கிறார். திருமணத்துக்குப் பிறகு, பல ஆண்டுகள் கழித்தே திரைப்படங்களில் ஜோதிகா மீண்டும் தோன்றினார். அதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கருத்து கூறும் திரைப்படங்களில்தான் கவனம் செலுத்தி நடித்துவந்தார், ஜோதிகா. அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் OTT(Over the top Media)-யில் மே 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
‘பொன்மகள் வந்தாள்’ அமேசானில் வெளியாவதை வரவேற்போம் - இயக்குநர் ஹரி உத்ரா
இது குறித்துப் பேசிய ஜோதிகா, 'பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களுக்குத் திரையரங்குகளில் அதிக வரவேற்பு இருப்பதில்லை. OTT தளங்கள் இதுபோன்ற காலத்தில் எங்களுக்கு இந்த இடைவெளியை நிரப்ப உதவி செய்துள்ளது. இதன் மூலம் பல நாடுகளில் வாழும் மக்கள், இதுபோன்று கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களைப் பார்க்க முடியும். இது எங்களுக்குப் பெரிய இடத்தைக் கொடுக்கிறது' என்றார்.
சமூக கருத்து கூறும் திரைப்படங்களில் நடிப்பதற்கான காரணம் குறித்து ஜோதிகா தொடர்ந்து பேசினார்.
'என்னைச் சுற்றி நடக்கிற பிரச்னைகளை பேசுகிற கதைகளையே நான் தேர்வு செய்கிறேன். மக்களை சினிமா ஏதாவதொரு வழியில் பாதித்துக்கொண்டே தான் இருக்கும். எனவே, நான் தேர்வு செய்யும் கதைகள் குறித்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அதனாலேயே இதுபோன்ற கதைகளை நான் தேர்வு செய்கிறேன். 'பொன்மகள் வந்தாள்', என் மனதில் குடிகொண்டிருக்கும் பிரச்னையைப் பேசுகிற படமாக இருக்கும்.
பெண்களை மரியாதையாக, தைரியமான பெண்களாகச் சித்தரிக்கும் படங்களில் நடிக்கவே நான் விரும்புகிறேன். நிஜ வாழ்க்கையில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை 80 விழுக்காடு திரைப்படங்கள் காட்டுவதே இல்லை. பெண்கள் புத்திசாலிகளாக மல்டிடாஸ்கர்களாகவே நிஜ வாழ்க்கையில் இருக்கிறார்கள்.
ஆதலால், புத்திசாலி பெண்ணைக் கொண்ட கதைகளிலேயே நான் நடிக்க விரும்புகிறேன். நானும் இரு குழந்தைகளுக்குத் தாயாக இருக்கிறேன். எனவே, எனக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. டிவியைத் திறந்தால் அவர்கள் என்ன பார்க்கிறார்கள். எதை கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நான் அறிவேன். நான் ஒரு முன் உதாரணமாக இருக்க விரும்புகிறேன்' என்றார்.
இதையும் படிங்க...'நல்லோர் சிந்தனைகளைப் படிக்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை'- சூர்யா