ஒரு நடிகனாக மட்டுமின்றி, சிறந்த பேச்சாளராக, மேடைக் கலைஞராக, தன் மன அழுத்தத்தைக் கூட சரியான வழியில் கையாண்டு ஓவியர் அவதாரம் எடுத்த பக்குவப்பட்ட பன்முகக் கலைஞனாக நம்மை என்றைக்குமே ஈர்க்கத் தவறாத ஜிம் கேரியின் மறக்க முடியாத சில கதாபாத்திரங்களைக் காணலாம்
ஏஸ் வென்ட்சுரா : பெட் டிடெக்டிவ் (Ace Ventura : Pet Detective)
ஒரு பெட் டிடெக்டிவாய் குறிப்பாக செல்லப்பிராணிகளையும் விலங்குகளையும் எளிதில் கவர்ந்து தன் வசமாக்கிவிடும் டிடெக்டிவ் வென்ட்சுராவாக ஜிம் இந்தப் படத்தில் கலக்கியிருப்பார். வயிறு குலுங்க சிரிக்க வைக்கும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் நகைச்சுவை, ஆரம்பம் முதல் இறுதிவரை நம்மை நகைச்சுவை ததும்பும் வசனங்களால் கட்டிப்போடும் ஏஸ் வென்ட்சுரா ஹாலிவுட்டின் கிளாசிக் காமெடி திரைப்படமாக விளங்கும். ஆல்ரைட் தென் என்பதை தனக்கே உரித்தான பலவித மாடுலேஷன்களில் ஜிம் கேரி படம் முழுவதும் கூறும் இடங்களை தனித்தொகுப்பாக ரசிக்கலாம்.
தி ட்ரூமேன் ஷோ: (The Truman Show)
நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து பயணித்துவந்த ஜிம் கேரி, வித்தியாசமான முயற்சியில் இறங்கி, நடிப்பிற்காக இன்றளவும் சிலாகிக்கப்படும் படங்களில் ஒன்றுதான் தி ட்ரூமன் ஷோ. தன் அன்றாட வாழ்க்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், ஒரு சின்னத்திரை ரியாலிட்டி ஷோவாக தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டும் வருவது தெரியாது வாழ்ந்துவரும் ஒரு சராசரி மனிதனாக ஜிம் கேரி இந்தத் திரைப்படத்தில் தோன்றியிருப்பார். அறிவியல் புனைவான இந்தப் படத்தை தத்துவார்த்த ரீதியிலும் அணுகலாம். படம் முழுவதும் குறிப்பாக இறுதிக்காட்சியில் ஜிம் கேரி கூறும் இன்கேஸ் ஐ டோண்ட் சீ யூ, குட் மார்னிங், குட் ஆஃப்டெர்நூன், குட் நைட் வசனம் என்றைக்குமான அவரது ட்ரேட் மார்க் வசனங்களுள் ஒன்று.
தி மாஸ்க்: (The mask)
90களின் மிகப்பிரசித்திபெற்ற கார்ட்டூன் கதாப்பாத்திரமான தி மாஸ்க்கில், ஸ்டான்லி இப்கிஸ் எனும் ஒரு அன்றாட வங்கிப் பணியாளரிடம் கிடைக்கும் சக்தி வாய்ந்த முகமூடியைப் பற்றிய இந்தக் கதையில் ஜிம் கேரி ஆடியது ருத்ர தாண்டவம். காமிக் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இந்த சூப்பர் ஹீரோ திரைப்படத்தில், விஷூவல் எஃபெக்ட்ஸ்தான் படத்தை ஆக்கிரமிக்கும் முழுமுதல் காரணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இடத்தில், அனைத்தையும் தாண்டி ஜிம் கேரி ஸ்கோர் செய்திருப்பார். தனது செல்ல நாய் மைலோவுடன் மாஸ்க் அவதாரம் எடுத்தபின் தனது ஸ்லாப்ஸ்டிக் காமெடியில் வெளுத்து வாங்கிய ஜிம் கேரியின் வாழ்நாளில் சிறந்த பெர்ஃபாமன்ஸாக மாஸ்க் என்றுமே உயர்ந்து நிற்கும்
எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைண்ட்: (Eternal Sunshine of the Spotless Mind)
தங்களது உறவை முறித்துக் கொண்ட காதலர்கள் தங்களது காதல் நினைவுகளை அழித்து, புது இல்லுலக வாழ்க்கையில் பயணிக்க முயற்சிக்கும் அறிவியல் புனைவாக இந்தத் திரைப்படம் அமைந்திருக்கும். சமூகத்தில் பெருமளவு ஒட்டாத, கூச்ச சுபாவம் ஆக்கிரமித்துள்ள, காதலில் கரைந்துருகும் ஜோயல் பேரிஷாக ஜிம் கேரி இந்த படத்தில் ஜொலித்திருப்பார். தன் உடலை வளைத்து நெளித்து கோணல் முகபாவனைகளால் நகைச்சுவைப் படங்களில் மட்டுமே ஜிம் கேரியால் முத்திரை பதிக்க முடியும் என்ற பிம்பத்தை சுக்குநூறாக உடைத்து, தன் அண்டர்ப்ளே பெர்ஃபாமன்ஸால் காதலில் கரைந்துருகிய ஜிம் கேரியின் நடிப்புலக வாழ்வில் இந்தத் திரைப்படம் ஒரு மணிமகுடம்.
டம்ப் அண்ட் டம்பர்: (Dumb and Dumber)
தாங்கள் கண்டெடுத்த அடையாளம் தெரியாத பணம் நிரம்பிய ஒரு ப்ரீஃப்கேஸை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க நாடு தாண்டி பயணிக்கும் உலகம் அறியாத இரு நண்பர்ளைப் பற்றிய இந்தத் திரைப்படம் ஒரு வழக்கமான கதைதான் என்றாலும் ஜிம் கேரிக்கும், ஜெஃப் டேனியலுக்குமான கெமிஸ்ட்ரிதான் படத்தை முழுமையாக ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. நடிப்புத்தளத்தில் இரு நடிகர்களாலும் இம்ப்ரூவைஸ் செய்து பெருமளவில் எடுக்கப்பட்ட பல காட்சிகளை இந்தப் படம் கொண்டிருப்பது அதன் தனிச் சிறப்பு.
தன் வாழ்நாளில் பல சிறந்த பெர்ஃபாமன்ஸ்களை வழங்கி, அகாதமி விருதுகளுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த ஜிம் கேரிக்கு, மேன் ஆன் த மூன் (Man on the moon), தி கேபிள் கய் (The Cable Guy), ப்ரூஸ் அல்மைட்டி (Bruce Almighty), லயர் லயர் (Liar Liar), யெஸ் மேன் (Yes Man) என அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்காகவும் அவர் ஆட்கொண்ட கதாபாத்திரங்களுக்காகவும் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் சிரிப்பொலியையும், அன்பையும் தொடர்ந்து வழங்கி அவரை வாழ்த்தி அங்கீகரிக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் ஜிம் கேரி!