வெல்லிங்டன்: பெரிதும் எதிர்பார்க்கப்படும் அவதார் படத்தின் 2ஆம் பாக படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நியூசிலாந்து அரசு அறிவுறுத்தலின்படி அவர்களின் மேற்பார்வையுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டு ஜேம்ஸ் கேமரூனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சுமார் 54 பேர் ஏர் நியூஸிலாந்து விமானத்தில், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து புறப்பட்டு வெல்லிங்டன் வந்தடைந்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனை முடிந்து இவர்கள் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் தயாரிப்பாளர் லாண்டோ, அவதார் 2 படப்பிடிப்புக்காக நியூசிலாந்து செல்லவிருப்பதாக கடந்த வாரம் தெரிவித்தார். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக நியூசிலாந்து அரசு ஊரடங்கை மார்ச் மாதம் மத்தியில் அமல்படுத்தியதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று தாக்கம் தற்போது மெல்ல மெல்ல குறைந்துவரும் நிலையில், பல்வேறு நாடுகள் மெதுவாக சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக நியூஸிலாந்தில் கரோனா தாக்கம் நன்கு குறைந்து விட்டதால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருப்பினும் கரோனா வைரஸ் தொற்றும் மீண்டும் பரவாமல் இருக்க பல்வேறு வழிகாட்டுதல்களை அரசு அறிவுறுத்து வரும் நிலையில், தற்போது அவதார் படக்குழுவினர் அரசின் அறிவுரைப்படி தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
2009இல் வெளியாகி வசூலில் உலக சாதனை படைத்த அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 2021 டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவதார் 3 டிசம்பர் 2023, அவதார் 4 டிசம்பர் 2025, அவதார் 5 டிசம்பர் 2027 ஆகிய ஆண்டுகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.