ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றிகொண்டு தன் ராஜ்ஜியத்தை மீட்ட வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. சிவகங்கை மண்ணின் வீரத்தை சொல்லும் படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18கே ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராஜேந்திரன் மணிமாறன் இயக்கத்தில் ’வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம், தைத் திருநாள்ப் அன்று தொடங்க உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் வேலுநாச்சியாராக பல சரித்திரப் படங்களில் நடித்து அனுபவம் பெற்ற முன்னணி நடிகை நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் வேலு நாய்ச்சியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பல சரித்திரப் படங்களில் நடித்த அனுஷ்கா நடிக்கிறார் என ஒருதரப்பினர் தெரிவித்துவந்த நிலையில், சமீபகாலமாக நயன்தாரா இப்படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிஆர்ஓ தரப்பிலிருந்து இதுகுறித்து மறுப்பு தெரிவித்து விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் தான் நடிப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது என்றும், தவறான வதந்திகளைப் பரப்பாமல் உண்மையை ஆராய்ந்து செய்தி வெளியிடுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.