சென்னை: எலி மருந்து நெடியால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சோகம் தமிழ்நாட்டை வாட்டி வரும் நிலையில், தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமத்தை வேளாண் துறை ரத்துசெய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், இன்னும் இரண்டு தினங்களில் அதன் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை அருகே குன்றத்தூரில் தனியார் வங்கி மேலாளர் வீட்டில் எலி தொல்லை காரணமாக தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தை அணுகியுள்ளார். அவர்கள் வாயிலாக எலி மருந்து வைத்ததில் இரண்டு குழந்தைகள் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அளவுக்கு அதிகமாக எலி மருந்தை பயன்படுத்தியதால் ஏற்பட்ட நெடி தான் குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்தது.
உயிரிழந்த குழந்தைகளின் தாயும், தந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குன்றத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
வேளாண் துறை சொன்ன தகவல்
தொடர்ந்து வேளாண்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, எலிமருந்து வீட்டிற்குள் வைக்க கூடாது எனவும், வெளிப்புறத்தில் தான் வைக்க வேண்டும் எனவும், விதிமுறை மீறி செயல்பட்டதால் அந்த தனியார் நிறுவனத்தின் உரிமையை ரத்துசெய்து அம்பத்தூர் வேளாண் துறை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இன்று அல்லது திங்கட்கிழமை (நவம்பர் 18) அந்த தனியார் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும் என வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எலிமருந்தால் பறிபோன பிஞ்சு உயிர்கள்
வீட்டில் அதிகமாக எலித் தொல்லை இருந்ததால், தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தை அணுகி, வீட்டில் இருக்கும் எலித் தொல்லையை அறவே ஒழிக்க வேண்டும் என தனியார் வங்கி மேலாளர் கிரிதரன் (34) கோரியுள்ளார். இதனையடுத்து, தியாகராய நகரில் தலைமை அலுவலகத்தை அமைத்து செயல்படும் பெஸ்ட் கண்ட்ரோல் ஆன்லைன் நிறுவனத்தில் செயல்படும் ‘யுனிக்’ எனும் பிராண்ட் முகவர்கள், கிரிதரன் வீட்டிற்கு வந்து மருந்து தெளித்துள்ளனர்.
பொதுவாக, பூச்சு விரட்டிகள் பல விதமாக கையாளப்படுகிறது. இதில், கிரிதரன் வீட்டில் மருந்து தெளித்தும், எலி மருந்து பேஸ்ட்டை ஆங்காங்கே வைத்தும் முகவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிய கிரிதரன் மனைவி பவித்ரா (31), வைஷ்ணவி (6), சாய் சுதர்சன் (1) ஆகிய இரண்டு குழந்தைகளை மற்றும் தன் கணவரை அழைத்துக் கொண்டு ஏசி அறையில் உறங்கச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, நேற்று காலையில் கண்விழித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், இரு குழந்தைகளும் உயிரிழந்தனர். பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் காவல்துறை, சம்பவத்தை பெற்றோரிடம் விசாரித்து உறுதி செய்தது. மேலும், வீட்டில் எலி மருந்து வைத்த ஊழியர், நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், ஊழியர்கள் தினகரன், சங்கர் தாஸ் ஆகிய இரண்டு பேரையும் குன்றத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உரிமையாளர் பிரேம்குமார் தலைமறைவானதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் கூறியதென்ன?
இதற்கிடையில், வீட்டின் அறையில் மூன்று இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் எலி மருந்து வைத்ததே குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்றும், மருந்து வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் வரமாட்டோம் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததன் பேரிலேயே மூன்று மருந்துகள் வைப்பதற்கு பதிலாக 12 மருந்துகள் வைக்கப்பட்டதாகவும் கைதானவர்கள் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.