திரைத்துறையில் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் எனப்படும் பாஃப்டா (BAFTA) விருதுகள் வழங்கும் விழா லண்டனிலுள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் முன்னதாக நடைபெற்றது.
இந்த விழாவில், ’இன் மெமோரியம்’ எனும் பிரிவில் உயிரிழந்த பிரபலங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வழக்கமாக இடம்பெறும், இந்நிலையில், கடந்த ஆண்டு உயிரிழந்த பிரபல் பாலிவுட் நடிகர்களான இர்பான் கான், ரிஷி கபூர் இருவரும் இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டனர்.
தவிர ஏப்ரல் 9ஆம் தேதி உயிரிழந்த இளவரசர் பிலிப், ’பிளாக் பாந்தர்’ புகழ் சாட்விக் போஸ்மேன், பழம்பெரும் நடிகர் கிறிஸ்டோபர் பிளம்மர் ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்த இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான இர்ஃபான், 2020, ஏப்ரல் 29ஆம் தேதி அன்று தனது 54 வயதில் நியூரோஎண்டோகிரைன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, 70கள் தொடங்கி பாலிவுட்டின் காதல் நாயகனாக தன் பயணத்தைத் தொடங்கி, தன்னை மெருகேற்றி நல்ல நடிகராக சிறந்து விளங்கிய ரிஷி கபூர், ஏப்ரல் 30ஆம் தேதி தன் 67ஆவது வயதில் புற்றுநோயால் உயிரிழந்தார்.
இவர்கள் தவிர பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் என்னியோ மோரிகோன், பிரபல நடிகர் சீன் கோனரி உள்ளிட்டோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்விழாவை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் இணைந்து தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாத்தாவுக்காக தாயகம் திரும்பிய இளவரசர் ஹாரி!