தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக மட்டுமின்றி, குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மன்சூர் அலிகான். இவர் அரசியலில் ஈடுபட்டு வருவதோடு மட்டுமின்றி, சமூக பிரச்னைகள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்திவருகிறார்.
இன்று சர்வதேச பூமி தினம் என்பதை முன்னிட்டு, பூமிக்கு வர இருக்கும் ஆபத்துகள் குறித்தும், அதில் இருந்து நாம் பூமியை காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பதோடு, விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ‘பூதாளம்’ என்ற குறும்படத்தை யூடியூப் தளத்தில் நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ளார்.
தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கென்னடி பிலிம்ஸ் மூலம் தயாரித்து இயக்கியதோடு, வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருக்கும் ‘பூதாளம்’ குறும்படம், பூமி எப்படி இயங்குகிறது என்பதை பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும்படி எளிய முறையில் விவரிப்பதோடு, விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பூமியில் தோண்டப்படும் சுரங்கங்கள் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
இதையும் படிங்க... உலக பூமி தினத்தில் எடுக்க வேண்டிய ஐந்து உறுதிமொழிகள் - இந்திர சேகர் சிங்
தற்போது நாட்டில் நிலவும் கரோனா பிரச்னையில், எத்தனை கோடி பணம் வைத்திருந்தாலும் அவர்களின் முதல் தேவையான காய்கறிகளும், அரிசி உள்ளிட்ட உணவு பொருள்கள் மட்டுமே இருக்க, அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், அதற்கான இடமும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெருகிறது, என்பதை நாட்டு மக்களுக்கு தற்போது ஓரளவு புரிந்திருக்கும் நிலையில், மன்சூர் அலிகானின் ‘பூதாளம்’ குறும்படம் விவசாய நிலங்களை அழித்து அப்பார்மெண்ட்கள் கட்டும் வியாபாரிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக போகும் சில அரசியல்வாதிகள், அலுவலர்களுக்கும் சாட்டையடியையும் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் உலகமே கொண்டாடும் பூமி தினமான இன்று வெறும் வாழ்த்துகள் சொல்வதோடு நின்றுவிடாமல், பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த ஒவ்வொரு மனிதரும் தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர் வெளியிட்டிருக்கும் இந்தக் குறும்படம் ஆபத்தை அறியா மக்களுக்கான எச்சரிக்கையாக இருக்கிறது.
இதையும் படிங்க... சர்வதேச பூமி தினம்: பருவநிலை மாற்றத்திலிருந்து மனித குலத்தை காப்போம்