'இந்தியன் 2' படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூன்று உதவியாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் நசரத்பேட்டை காவல்துறையினர், வருவாய்த் துறை அலுவலர்கள் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரு சிலருக்கு மட்டும் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த விபத்தில் சிகிச்சை பெற்றவர்களின் முகவரிகளைச் சேகரித்து வைத்துள்ள காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக காயமுற்றவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்தில் இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் ஆகியோரும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளதால், விபத்து நடந்தபோது அவர்கள் அங்கு இருந்ததால் அவர்களிடமும் விசாரணை செய்யப்படவுள்ளது.
விபத்து தொடர்பாக இவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முழு விசாரணை நடத்தப்பட்ட பிறகே விபத்துக்கான முழுக் காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன் கிழமை இரவு 'இந்தியன் 2' படத்தின் இடைவெளியின்போது மின் விளக்கு பொறுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் விழுந்து உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட இரண்டு உதவியாளர்கள் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்த நிலையில், இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் ஆகியோர் நூலிழையில் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. விபத்தில் உயரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது இந்த விபத்துக்கு காரணமாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரத்பேட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.