வைகைப்புயல் வடிவேலு தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாவார். அவருடைய நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றே கூறலாம். வடிவேலு நடித்து சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
பிரச்சனையில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’
முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை வைத்து அதன் இரண்டாம் பாகத்தை 2017இல் எடுக்க இயக்குநர் சிம்பு தேவன், ஷங்கர் முடிவு செய்தனர். படத்திற்கு ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்று தலைப்பு வைத்து வடிவேலுவை மீண்டும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமும் செய்தனர். படம் தொடங்கிய சில நாட்களிலேயே வடிவேலுவுக்கும் சிம்புதேவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்திலிருந்து வடிவேலு விலகிவிட்டார். இதனையடுத்து பட வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததால் வடிவேலுக்கு வேறு எந்த படங்களிலும் வாய்ப்பில்லாமல் போனது. சில ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலு 'கத்தி சண்ட', 'மெர்சல்' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இந்தநிலையில், 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம், ஷங்கர் - வடிவேலு இடையே பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
பிரச்சனைக்கு தீர்வு
இந்த பிரச்சனையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்துள்ளது. மேலும் இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர், 23ம் புலிகேசி - II திரைப்படத்தில் நடித்த நடிகர் வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.
மேற்படி புகார் தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், வடிவேலு, எஸ். பிக்சர்ஸ் நிறுவனத்தை நேரில் அழைத்து பேசி, மேற்கண்ட பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து விரைவில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' திரைப்படத்தின் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'ஓ சட்டை மேலே எவ்வளவு பட்டன்ஸ்' - மீண்டும் இணையும் கமல் - வடிவேலு கூட்டணி?