வைகைப்புயல் வடிவேலு தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாவர். அவருடைய நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றே கூறலாம். வடிவேலு நடித்து சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் சங்கர் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை வைத்து அதன் இரண்டாம் பாகத்தை 2017இல் எடுக்க இயக்குநர் சிம்பு தேவன், தயாரிப்பாளர் சங்கர் முடிவு செய்தனர். படத்திற்க்கு ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ என்று தலைப்பு வைத்து வடிவேலுவையே மீண்டும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமும் செய்தனர். படம் தொடங்கிய சில நாட்களிலேயே வடிவேலுவுக்கும் சிம்புதேவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்திலிருந்து வடிவேலு விலகிவிட்டார். இதனையடுத்து பட வேலைகளும் நிறுத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், சமீபத்தில் வடிவேலு ஒரு நேர்காணலில் இயக்குநர் சிம்பு தேவன், சங்கரை கொச்சைப்படுத்திப் பேசியதாகக் கூறப்படுகிறது. வடிவேலுவின் இந்தப் பேச்சு திரையுலக பிரபலங்கள் பலரையும் எரிச்சலூட்டியது. இதையடுத்து, வடிவேலுவை ஒப்பந்தம் செய்யும்போது கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டும் வரம்பு மீறிய பேச்சைக் கண்டித்தும் தயாரிப்பாளர் சங்கர் தரப்பில் வழக்கு தொடரப் போவதாகத் தகவல் வெளியாகியது.

இதனால் சிம்புதேவன், சங்கரை சமரசம் செய்வதற்காக வடிவேலு பணத்தைத் திருப்பி கொடுப்பதாகக் கூறியுள்ளார். வடிவேலுவின் இந்த சமரச முடிவை சங்கர், சிம்புதேவன் ஏற்றுக் கொள்வார்களா... இல்லை வழக்கு தொடர்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.