உலகெங்கிலுமிருந்து ஊக்கமளிக்கும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி 2013ஆம் ஆண்டுமுதல் வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பட்டியலை பிபிசி இன்று வெளியிட்டது. அதில் பா. இரஞ்சித்தின் ’Casteless Collective' இசைக்குழுவைச் சேர்ந்த இசைவாணி இடம்பிடித்துள்ளார்.
கானா உலகம் ஆண்களுக்கானது என்ற பிம்பத்தை உடைத்து தனியொரு பெண்ணாக அதில் கலக்கிவருகிறார். அவர் பாடிய ‘பெரிய கறி’ பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிபிசி பட்டியலில் இசைவாணி இடம்பெற்றதற்கு இரஞ்சித் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இசைவாணியை பாடச்சொல்லி பொறுமையாக ரசித்துக் கேட்டிருக்கிறார்.
இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தேனே”, “கானக் கருங்குயிலே” ஆகிய பாடல்களைப் பாடிக் காண்பித்திருக்கிறார் இசைவாணி. மேலும், “ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்று கூறி மகிழ்ந்திருக்கிறார் இளையராஜா.
இன்னும் இதுபோல் பல சாதனைகள் படைக்க இசைவாணிக்கும், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவினருக்கும் வாழ்த்துகளை இளையராஜா கூறியுள்ளார்.