வாஷிங்டன்: ஆஸ்துமா பிரச்னை இருப்பதால், கரோனா பாதிப்பு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கவலை ஏற்பட்டுள்ளது என்று ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா கூறியிருக்கிறார்.
47 வயதாகும் ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா, தனக்கு கரோனா தொற்று உள்ளது என்று சோதனையில் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக கடந்த இரு நாள்களுக்கு முன் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தனது உடல்நிலை தற்போது எவ்வாறு உள்ளது என்பது குறித்து காணொலி நேரலை மூலம் தெரிவித்தார். அதில் சில சந்தேகங்களையும் எழுப்பினார்.
அவர் நேரலையில் தெரிவித்ததாவது:
எனக்கு ஆஸ்துமா உள்ளது. சுவாசப் பிரச்னை இருப்பதால், கரோனாவால் ஆபத்து கட்டத்தில் இருப்பவர்களில் ஒருவராக இருக்கிறேன். எனவே ஆஸ்துமா பிரச்னை எனக்கு மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் எனக் கவலை ஏற்பட்டுள்ளது.
கரோனோவினால் உலகில் நடக்கும் விஷயங்களும், அதை நாம் எதிர்கொள்ளும்விதமும் கவலையளிக்கிறது. இந்தத் தொற்றால் எனக்கு நடப்பதை நேர்மையாக உங்களுக்குத் தெரிவிப்பதன்மூலம் அதை எதிர்கொள்ளும்விதத்துக்கு உதவிபுரிவதாக நம்புகிறேன்.
ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ், ரிடா வில்சன் ஆகியோரைப் பார்த்துதான், இந்தத் தொற்றை எப்படி எதிர்கொண்டுவருகிறேன் என்பதை ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வெளிப்படைத் தன்மையுடன் பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
'தோர்', 'அவெஞ்சர்ஸ்' சீரிஸ் படங்களில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் இட்ரிஸ் எல்பா. திரைப்படம் மட்டுமல்லாமல், தொலைக்காட்சித் தொடர்கள், மியூசிக் விடியோ, விடியோ கேம் கதாபாத்திரங்களிலும் தோன்றியுள்ளார். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவர் என்றும், அடுத்த பாண்டாக இவர் நடிக்கலாம் என்று ஹாலிவுட் திரையுலகில் பேசப்பட்டது.
இந்தச் சூழலில் இவருக்குக் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பாவுக்கு கரோனா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!