'பாலிவுட்' நடிகர் சயீப் அலி கான் நடிக்கும், 'தாண்டவ்' என்ற வெப் சீரிஸுக்கு தடை விதிக்கக் கோரி, பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த தொடர், இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம் ஓடிடி இயங்குதளத்தில் சமீபத்தில் வெளியான தாண்டவ் வெப் சீரிஸ், இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. அந்த தொடரை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ ராம் கடம், மும்பையின் கட்கோபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையில், வெப் சீரீஸை தடை செய்யக் கோரி பாஜக எம்.பி. மனோஜ் கோடக், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "ஓடிடி இயங்குதளம் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த தளம் அனைத்து தணிக்கை அதிகாரங்களிலிருந்தும் விடுபட்டுள்ளது. சில நேரங்களில் அவற்றில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஓடிடி இயங்குதளம் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் தளங்களையும் ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஓடிடியில் வெளியாகும் சில நிகழ்ச்சிகளில் பாலியல், வன்முறை, போதைப்பொருள், துஷ்பிரயோகம் மற்றும் மோசமான செயல்களால் நிரம்பியுள்ளன. சில சமயங்களில் அவை மத உணர்வுகளையும் புண்படுத்துகின்றன. அண்மையில் வெளியிடப்பட்ட 'தாண்டவ்' வெப் சீரீஸ் நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாண்டவின் தயாரிப்பாளர்கள் இந்து கடவுள்களை வேண்டுமென்றே கேலி செய்ததாகவும், இந்து மத உணர்வுகளை அவமதித்ததாகவும் தெரிகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு அமேசான் பிரைமிற்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.