கன்னடத் திரையுலகில் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகமாக உள்ளதாக வந்த தகவலை அடுத்து சமீபத்தில் போதை தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கன்னட நடிகை அனிகாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்களை கைப்பற்றினர்.
கன்னடத் திரையுலகில் பலர் போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக அனிகா காவல் துறையிடம் தெரிவித்தார். இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மக்கள் திரைப் பிரபலங்களை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்க தொடங்கி உள்ளனர்.
தற்போது இச்சம்பவம் குறித்து கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப், யாரோ ஒருவர் தனிப்பட்ட முறையில் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த பிரபலங்களையும் தவறாக சிந்திக்க வேண்டாம் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கிச்சா சுதீப் கூறியதாவது, 'எனக்குத் தெரிந்ததை மட்டுமே என்னால் சொல்ல முடியும். நான் கன்னட திரையுலகத்தைச் சேர்ந்தவன். ஆனால் எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது.
எனக்கு ஒரு பெரிய நண்பர்கள் வட்டம் இல்லை. படப்பிடிப்பு முடிந்தவுடன் நான் நேராக எனது வீட்டிற்கு சென்று விடுவேன். எனவே இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தனிப்பட்ட நபர் ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த பிரபலங்கள் மீது பழி சுமத்த வேண்டாம். இங்கு இருப்பவர்கள் மக்களால் வளர்க்கப்பட்டவர்கள்' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், திரைப்பட நடிகரும் பாஜக தலைவருமான தாரா அனுராதா, மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்களால் மட்டுமே இதுபோன்ற குற்றச் செயல்களை தடுக்க முடியும் என கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
திரையுலகில் குறைந்தது 15 பேர் போதைப்பொருள்களை பயன்படுத்துவதாக திரைப்படத் தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.