நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து ஏழுமலை, பெஞ்சமின், கார்த்திகேயன் ஆகியோர் தொடர்ந்த வழக்கானது நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து, ஏழுமலை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சோமயாஜி, நடிகர் சங்கத் தேர்தலை பதவிக்காலம் முடிந்த நிலையில் அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர் என்று கூறினார். மேலும், புகார்களின் அடிப்படையில் தேர்தலை நிறுத்திவைக்க பதிவுத்துறை உத்தரவிட்டது என்று கூறிய அவர், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்ததாகக் கூறினார். சங்க விதிப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் போது, தேர்தல் நடைபெறுவதை 21 நாட்களுக்கு முன்னர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்ற விதியை கடைபிடிக்கப்படவில்லை என்றும், வெளி மாநிலங்களில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு தபால் வாக்குகள் முறையாக அனுப்பவில்லை என்றும் சோமயாஜி கூறினார்.
மனுதாரர் கார்த்திகேயன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய விளக்கமளிக்காமல் 61 உறுப்பினர்கள் தொழில் முறை சாராத உறுப்பினர்களாக மாற்றப்பட்டதால் நடந்து முடிந்த தேர்தலை ரத்துசெய்துவிட்டு உறுப்பினர் சரிபார்ப்புக்கு பின் தேர்தலை நடத்த உத்தரவிடவேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி, நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்யமுடியாது என்றும் மனுதாரர்கள் தொழில்முறை சாராத உறுப்பினராக மாற்றப்பட்டதால் வாக்குரிமை பறிக்கப்பட்டது குறித்து மட்டுமே விசாரணை செய்யப்படும் என தெரிவித்து, வழக்கு விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: சிவாஜியின் கலை வாரிசுக்கு, அன்பு வாரிசு கொடுத்த பரிசு!