சென்னை: தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் நெடுங்காலம் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கமாட்டார்கள். அரிதிலும் அரிதாகவே சிலர் பல காலம் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் நடிகர் தலைவாசல் விஜய்.
1992ஆம் ஆண்டு வெளியான தலைவாசல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானதால் இவர் தலைவாசல் விஜய் என்று அழைக்கப்பட்டார். அறிமுகமான ஆண்டிலேயே சிவாஜி, கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தேவர் மகன் திரைப்படத்தில் கிடைத்தது.
அத்திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சிறப்பாக நடித்திருந்தார். அதனையடுத்து தமிழ் சினிமாவில் 90-களில் வெளியான படங்களில் பெரும்பாலும் தலைவாசல் விஜய் நடித்தார்.
குறிப்பாக குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும் அவ்வப்போது வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஏறத்தாழ 29 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இயங்கிக்கொண்டிருக்கும் தலைவாசல் விஜய் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் அவர் இன்று தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் 🎂HBD தலைவாசல் விஜய்🎉என வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.