பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் இதுவரை 200 படங்களைத் தயாரித்துள்ளார். இவர், தன்னிடம் வாய்ப்பு கேட்டுவரும் நடிகைகளை பாலியல் ரீதியாக அணுகியதாக, ஏஞ்சலினா ஜோலி புகார் அளித்தார்.
அவருடன் இணைந்து 80க்கும் மேற்பட்ட மாடல் அழகிகளும், பாலியல் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் ஹார்வி வெய்ன்ஸ்டைன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து, ரிக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது அவ்வப்போது புதிய பாலியல் வன்கொடுமைகள் புகார் பதியப்பட்டு வருகிறது.
சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது நான்கு புதிய வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போது மேலும் இரண்டு புதிய வழக்குகள் அவர்மீது பதியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்மீது பதியப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது.
புதிய குற்றச்சாட்டுகளின் படி, ஹார்வி வெய்ன்ஸ்டீன் செப்டம்பர் 2004 அல்லது 2005 ஆம் ஆண்டுகளில் பெண் ஒருவரை பெவர்லி ஹில்ஸில் உள்ள ஒரு ஹோட்டலில் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்குகளுக்காக ஹார்வி வெய்ன்ஸ்டைனிடம் டிசம்பர் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன் கைது!