கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும் தொடர் நடவடிக்கையாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிப்பு செய்து அமல்படுத்தப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் தொழில் நிறுவனங்களை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டும், கரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றியும் இயக்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து தொழில் நிறுவனங்கள் அரசு கூறிய வழிமுறைகளை பின்பற்றி இயங்கிவருகின்றன. தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாணை வைத்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ”தேசிய ஊரடங்கிற்கு பிறகு நாம் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இப்போதுதான் நாம் கரோனாவிடம் இருந்து தப்பித்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்கு, வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். தொழிற்சாலைக்குள் வரும் பணியாளர்களை கட்டாயம் தெர்மல் ஸ்கேனிங் செய்துகொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் பணியாளர்கள் கண்ட கண்ட இடங்களில் எச்சி துப்பக்கூடாது. எப்போதும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வப்போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
பணியாளர்கள் யாரேனுக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். அரசாங்கம் கூறியிருக்கும் விதிமுறைகளை எல்லாம் நாம் கடைப்பிடித்தால் இந்த கரோனாவிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம். நம்பிக்கையுடன் இருங்கள்” என ஹரிஷ் கல்யாண் பேசியுள்ளார்.