'சிந்து சமவெளி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரீஷ் கல்யாண். இதனையடுத்து அவர், 'பொறியாளன்', 'வில் அம்பு' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார்.
பிக் பாஸுக்கு முன், பிக் பாஸுக்கு பின்...
ஆனால் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் ஹரீஷ் கல்யாண் கலந்து கொண்டார். தனது நேர்மையான குணம் மூலம் நிகழ்ச்சியில் விளையாடிய அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.
இதனையடுத்து அவர் நடிப்பில் வெளியான, 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் பெரும் ஹிட்டானது. அதிலும் குறிப்பாக ஹரீஷின் நடிப்பு இளம் பெண்களை பெரிதும் கவர்ந்தது.
பக்கத்து வீட்டுப் பையன் லுக்!
என்னதான் ஹரீஷ் கல்யாணை ரொமான்டிக் நாயகன், ஸ்டைலிஷ் நாயகன் என்றெல்லாம் அழைத்தாலும் அவர் பார்ப்பதற்கு நமது பக்கத்து வீட்டுப் பையன் லுக்கிலேயே உள்ளார்.
இதுகுறித்து அவர் ஒருமுறை பேட்டியில்கூட கூறியுள்ளார், ''நான் சரியான ஃபேஷன் ஃப்ரீக். ஆனால் ரசிகர்களுக்கு நான் பார்க்க பக்கத்து வீட்டுப் பையன் லுக்கில் இருப்பதால் ஃபேஷனை நான் பார்த்து கையாள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது" எனக் கூறினார்.
ரொமான்டிக் VS கோபக்கார இளைஞர்
ரொமான்டிக் நாயகனாக நாம் பார்த்துக் கொண்டிருந்த ஹரீஷ், திடீரென புதிய ஜானரை முயற்சி செய்தார். எப்போதும் சிரித்துக் கொண்டு நடிக்கும் ஹரீஷ் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் கோபக்கார இளைஞனாக நடித்திருந்தார். இது புதிய தலைமுறை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
எப்போதும், தான் ரொமான்டிக் படத்திலேயே நடிப்பதாகவும், இந்த முறை மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக இப்படத்திற்குச் சம்மதம் தெரிவித்தாகவும் இப்படம் குறித்து ஒரு முறை பேட்டியில் தெரிவித்தார்.
சிம்புவின் நெருங்கிய நண்பர்
இவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் ஆவார். நண்பர்கள் என்றால், என்ன... ஹாய்... பாய்... எனக் கூறி செல்லும் அளவுக்கு இல்லை, எப்போது இருவரும் ஒரேவீட்டில் இருக்கும் அளவிற்கு நெருங்கிய நண்பர்கள். பலமுறை ஹரீஷ் கல்யான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது படத்தின் அப்டேட்டுகளை சிம்பு தான் வெளியிடுவார்.
கரோனா பெருந்தொற்றின் மத்தியில் இன்று (ஜூன்.29) தனது 31ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஹரீஷ் கல்யாணை, அவரது ரசிகர்கள் காலை முதல் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'?