விஜய் படங்கள் என்றாலே சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு, வசூல் சக்ரவர்த்தி என்ற பெயர் பெற்றவர். வசூல் ரீதியாக சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும், உடனடியாக ஹிட் படம் கொடுக்கக் கூடியவர். மெர்சல் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜி தமிழ் நிறுவனம் 19 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அதன்பிறகு அவர் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரித்ததால், அவர்களே அதன் உரிமையை பெற்றுக்கொண்டு ஒளிபரப்பினர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள படம் ‘தளபதி 63’. இதில் இந்துஜா, ஜாக்கி ஷெரோஃப், டேனியல் பாலாஜி மற்றும் யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சன் நெட்வொர்க் நிறுவனம் இந்த படத்தின் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சன் நெட்வொர்க் தொடர்ந்து விஜய் உடன் நட்பு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னி மில்ஸில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு தளபதி 63 படப்பிடிப்பு நடைபெற்றபோது, தீ விபத்து ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் படக்குழுவினர் சோகத்தில் இருந்தனர். இப்படியான சூழலில் சன் நெட்வொர்க் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமைக்கு இத்தனை கோடி ரூபாய் அளிப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.