சென்னை: உலகளாவிய சமூக ஆஸ்கார் விருது மனித சமூகங்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த பன்னாட்டு, சமூக ஹீரோக்களை அங்கீகரிக்கிறது.
மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்பை கொடுத்து, பன்னாட்டு அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் பிரபலங்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், 11ஆவது பாராளுமன்ற உலக சமூக ஆஸ்கர் விருதுக்கான நான்கு பிரிவுகளின் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டேனி கே டேவிஸ் வெளியிட்டுள்ளார். இதில் ஜெய் பீம் படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு 2021ஆம் ஆண்டுக்கான உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைக் கதையை மையமாக வைத்து சமூகநீதி என்ற கருப்பொருளில் வெளியிடப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குநர் டி.ஜே. ஞானவேல், ஜெய் பீம் படக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜெய்பீம் திரைப்படத்திற்கு மகுடம்! என்னவா இருக்கும்?
அதேபோல், ‘இன்டர்நேஷனல் எமர்ஜிங் ஸ்டார் 2021’ பிரிவில், திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது. உலகெங்கிலும் வளரும் தலைவரின் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் நோக்கத்தில் இந்த விருது வழங்கப்படுகிறது.
குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 19ஆம் தேதி இல்லினாய்ஸ் நெய்பர்வில்லில் நடைபெற உள்ளது.
சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரித்த இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இருளர் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்ற சூழலில், சமீபத்தில் ஆஸ்கர் விழாவின் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனலில் ஜெய்பீம் படத்தின் காட்சிகள் இடம்பெற்றதை ரசிகர்கள் ஆர்வமாக ட்ரெண்ட் செய்துவந்தனர்.