சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகிவரும் விஷயங்களில் ஒன்று #GetWellSoonTHALA. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சண்டைக் காட்சியில் பைக் ரேஸ் போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதில் அஜித்துக்கு சிறிதளவு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி #GetWellSoonTHALA என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
பொதுவாக அஜித் தனது படத்தில் வரும் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் அவரே ரிஸ்க் எடுத்து செய்துவருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அதுவும் குறிப்பாக கார் சேஸிங், பைக் ரேஸ் போன்ற காட்சிகளில் அஜித் டூப் இல்லாமல் அவரே செய்துவருவார். அஜித்தின் கடந்த சில படங்களில் பார்தோம் என்றால் அவர் எடுத்த ரிஸ்க் அதிகம்.
'மங்காத்தா' படத்தில் பணம் கடத்தல் காட்சியில் அவரின் பைக் சாகசம், 'பில்லா 2' படத்தில் ஹெலிகாப்டர் சண்டைக் காட்சி, 'ஆரம்பம்' படத்தில் கார் டைவ் சண்டைக்காட்சி, 'விவேகம்' படத்தில் காட்டில் அவர் மேற்கொண்ட உடற்பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள், 'வீரம்' படத்தில் ட்ரெயின் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட சில படத்தில் அவர் மேற்கொண்ட ரிஸ்க் அதிகம். அதில் சில காட்சிகளில் அவர் காயம் எதும் ஏற்படாமல் செய்துமுடித்தார்.
சில காட்சிகளில் மருத்துவமனையில் அனுமதி மருத்துவர்களின் கண்காணிப்பு. இப்படி அஜித் சண்டைக்காட்சியில் ஏற்படும் காயங்களுக்கும் சிறு சிறு அடிக்கும் அவரது ரசிகர்கள் #GetWellSoonTHALA என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளத்தில் வலம்வருவார்கள். தற்போது நெல்லை மாவட்ட ரசிகர்கள் அஜித் விரைவில் குணமடைந்து வரவேண்டி அங்குள்ள கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படம் 'பிங்க்' ரீமேக்காக இருந்தாலும் தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்கள் பெற்று வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது மீண்டும் வினோத்துடன் அஜித் சேர்ந்து வலிமை படத்தில் பணியாற்றிவருகிறார்.
இப்படம் குறித்து அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. வினோத்தின் படம் பொதுவாக மற்ற படங்களிலிருந்து சில வித்தியாசங்களுடன் மாறுபட்டிருக்கும். வலிமையும் வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். காயத்திலிருந்து சீக்கிரம் குணமடைந்து மீண்டு வர #GetWellSoonTHALA...