நடிகர் கவுதம் கார்த்திக் நடித்துள்ள தேவராட்டம் திரைப்படம் வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீசாலும், மக்களிடையே கிடைக்கும் வரவேற்பாலும் துறுதுறுவென ஓடிக்கொண்டிருந்தவரை நிறுத்தி நமது ஈ-டி.வி. பாரத்திற்காக பேசியபோது...
முதல் முறையா கிராமத்து சப்ஜெக்ட்டில் நடித்துள்ளீர்கள் இந்த கதையை கேட்கும்போது உங்களுக்கு சரியாக வருமா என்று நினைத்தீர்களா?
இந்த கதையை நான் முதலில் கேட்கும்பொழுது இந்த மாதிரி ஒரு படத்தில் என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்ததால் தயங்கினேன். இயக்குனர் முத்தையா கொடுத்த உத்வேகத்தால் நடிக்க முடிந்தது. அந்த தயக்கத்தை பெரிய பிரச்னையாக பார்ப்பதால்தான் பயமாக இருக்கிறது. பயத்தைப் போக்க நினைத்து கதாபாத்திரத்திற்கு தேவையான சின்னச் சின்ன விஷயங்களையும் அக்கறை எடுத்து செய்தேன் .
இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்த நீங்கள் இப்போது அக்கா தங்கை சென்டிமென்டில் நடிக்கிறீர்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு படத்தில் நடிக்கும் போது யார் மனமும் புண்படும்படி நடந்து கொள்ள மாட்டேன். படத்தை ஒரு பொழுதுபோக்கு அம்சமாகதான் பார்க்க வேண்டும். இந்த படத்தில் ஒரு நல்ல மெசேஜை சொல்ல முயற்சி செய்துள்ளோம். அனைத்து விதமான ரசிகர்களும் என்னைப் பார்க்க வேண்டும். அனைவருக்கும் என் படம் சென்றடைய வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
இதுபோன்ற சென்டிமென்ட் படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா?
எனக்கு இது போன்ற ஒரு அடையாளம் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். எப்பொழுதும் புதுசு புதுசாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நான் இந்த துறைக்கே வந்தேன் .
இந்த படத்தை உங்கள் அப்பா பார்த்தாரா? அவர் என்ன கூறினார்?
அப்பா மிகவும் பிஸியாக இருப்பதால் அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. நிச்சயமாக படம் பார்ப்பார். படம் பார்த்தால் கண்டிப்பாக உங்களிடம் நான் பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்கள் நடிக்கவிருக்கும் படங்கள் பற்றி?
அடுத்த புராஜெக்ட் நான் இப்போது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இயக்குனர் நாதன் இயக்கத்தில் நானும் சிம்புவும் இணைந்து நடிக்க உள்ளோம் இப்போதைக்கு இது மட்டும்தான் கூற முடியும் .
தேவராட்டம் படம் குறித்து மக்களிடையே வந்த ரிவ்யூஸ் பற்றி...
நான் நடித்த தேவராட்டம் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மக்களும் ஆர்வமாக படம் பார்க்க வருகிறார்கள். தயாரிப்பாளர் மற்றும் technicians அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். படம் குறித்து எனக்கு வரும் செய்திகள் எல்லாம் பாசிட்டிவாக இருக்கு.