கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பேருந்துகளின் முழு வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'கம்பெனி'. இப்படத்தை தங்கராஜு இயக்க, ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் சார்பில் ஆர்.முருகேசன் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
பஸ் பாடிபில்டிங் தொழிற்சாலையில் படப்பிடிப்பு
இப்படத்தின் நாயகர்களாக ‘கோலி சோடா’ புகழ் பாண்டி, முருகேசன், அறிமுக நடிகர்கள் தெரிஷ் குமார், பிரித்வி, நாயகிகளாக ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த வளினா, ‘திரெளபதி’ படத்தில் நடித்த காயத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
பஸ்களை முழுமையாக வடிவமைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள், ஒரு லட்சியத்தோடு பயணிக்கிறார்கள். அவர்களுடைய அந்த லட்சிய பயணத்தில் வரும் பிரச்னைகளும், அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதோடு, இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத பஸ் பாடிபில்டிங் தொழிற்சாலையையும், அதன் பணிகளையும் படத்தின் முக்கிய கதாபாத்திரமாகவே இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார்.
டூப் போடாத நடிகர்
படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நான்கு இளைஞர்களில் ஒருவரான அறிமுக நடிகர் தெரிஷ் குமார், சண்டைக்காட்சிகளில் டூப் ஏதும் போடாமல் ரியலாக நடித்துள்ளார்.
ஒரு சண்டைக்காட்சியில் மிக உயரமான இடத்தில் இருந்து தெரிஷ் குமார் கீழே விழும்போது எதிர்பாரத விதமாக பாதுகாப்பு வளையத்தை தாண்டி விழுந்ததில் அவரது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது.
இயக்குநர் நம்பிக்கை
உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் இசையமைப்பாளர் ஜுபினின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜுபின் நிச்சயம் பாராட்டு பெறுவார் என்று இயக்குநர் தங்கராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட வேலைகள் நடக்கின்றன. விரைவில் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்க உள்ள படக்குழு திரையரங்கங்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: இணையத்தைக் கலக்கும் 'பொன்னியின் செல்வன் வடிவேலு மீம்ஸ்'