‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, நல்லாண்டி ஆகியோர் நடித்து இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியான திரைப்படம்தான் ‘கடைசி விவசாயி’. இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி 11 அன்று வெளியானது.
இதனையடுத்து விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இத்திரைப்படம் பெற்றது. ரசிகர்களும் விவசாயம் குறித்து வந்த நேர்த்தியான யதார்த்தத் திரைப்படம் என்று திரையரங்குகளிலும், சமூக வலைதளங்களிலும் புகழ்ந்துவருகின்றனர்.
விவசாயத்தைப் பிரதிபலிக்கும் யதார்த்த சினிமா
இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பெ. சண்முகம் இத்திரைப்படத்தை நட்சத்திரங்களுக்காக படக்குழுவினரால் திரையிடப்பட்ட பிரத்யேக ’பிரீமியர் காட்சி’யில் கண்டுள்ளார். அதனையடுத்து அவர் இத்திரைப்படம் குறித்து கூறுகையில்,
“விவசாயம் குறித்து இவ்வளவு யதார்த்தமாக வேறொரு திரைப்படம் சித்திரித்து இருக்குமா என்பது சந்தேகம்தான். கதாநாயகராக உண்மையான விவசாயி மாயாண்டி படத்தில் மட்டுமல்ல படத்தைப் பார்த்த அனைவரின் நெஞ்சங்களிலும் வாழ்கிறார்.
பயிர் செய்வதில் உள்ள அத்தனை அம்சங்களையும் அக்குவேறு ஆணிவேராகப் பளிச்சென்று வெளிப்படுத்தியுள்ள இயக்குநர் மணிகண்டனுக்குப் பாராட்டுகள். விவசாயிகள் மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய படம் இது. அனைவரும் அவசியம் 'கடைசி விவசாயி' திரைப்படத்தைப் பார்த்துவிடுங்கள். நாங்கள் நேற்று பார்த்தோம்” எனத் தெரிவித்தார்.
இத்திரைப்படத்தை ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் சசி, நடிகர் விதார்த், பல அரசியல், சமூக செயல்பாட்டளர்கள் போன்றோர் கண்டு கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.