மணிரத்னம் இயக்கிய 'அக்னி நட்சத்திரம்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிரோஷா. இப்படம் 1988ஆம் ஆண்டு வெளியானது. அதே ஆண்டில் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து படங்கள் வரத்தொடங்கியன. அந்தாண்டு மட்டும் சூரசம்ஹாரம், செந்தூர பூவே, பறவைகள் பலவிதம், பட்டிக்காட்டு தம்பி போன்ற பல படங்களில் நடித்தார்.
பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள்தான் நிரோஷா. எம்.ஆர்.ராதா - கீதா தம்பதியினருக்கு இலங்கையின் கண்டி மாநகரில் 1970ஆம் ஆண்டு பிறந்தார். தமிழில் மட்டுமில்லாமல் இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பிராந்திய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 80, 90 காலகட்டங்களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நிரோஷா. தமிழில் சிவகுமார், கார்த்திக், அர்ஜுன், பிரபு, ராம்கி, பாண்டியராஜன் என அன்றைய முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார். கமல்ஹாசனுக்கு ஜோடியாக 'கைதியின் டைரி' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ராம்கியை கரம்பிடித்த நிரோஷா
இவர் நடித்த அக்னிநட்சத்திரம், பாண்டி நாட்டு தங்கம், காவலுக்கு கெட்டிக்காரன், இணைந்த கைகள் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. பின்னர், 1995ஆம் ஆண்டு நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்த நிரோஷா, நடிப்பதில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார்.
பிறகு, மீண்டும் திரையுலகில் கால்பதித்த நிரோஷா மாதவனின் 'பிரியமான தோழி', சிம்புவின் 'சிலம்பாட்டம்', ஜெயம் ரவியின் 'தாஸ்' போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
இப்படி வெள்ளித்திரையில் அசத்தி வந்த நிரோஷ பின்னர் சின்னத்திரையிலும் கால்பதித்தார். 90s கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த 'சின்னபாப்பா பெரியப்பாப்பா' தொடரில் நடித்து தனது நகைச்சுவை பரிமாணத்தையும் வெளிப்படுத்தியிருப்பார்.
இந்நிலையில், நிரோஷா பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : சௌக்கார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது - நன்றி தெரிவித்து நடிகர் நாசர் அறிக்கை!