தமிழ் சினிமா வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தில் மனோரமா என்ற பெயர் இடம்பெறாத படங்கள் வந்ததே குறைவு எனச் சொல்லலாம். நகைச்சுவை கலந்த குணச்சித்திர நடிகை கதைக்குத் தேவையென்றால், மனோரமா பெயர்தான் பெரும்பான்மையான இயக்குநர்களுக்கு ஞாபகம் வரும்.
அந்த அளவு தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஆளுமையாக மனோரமா உருவெடுத்திருந்தார். அவர் சாதனைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம், பின்னாள்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அதிலும் சிறப்பாக ஸ்கோர் செய்திருப்பார் ஆச்சி. அதற்கு உதாரணமாக இந்தியன் படத்தைச் சொல்லலாம்.
இந்தியன் படத்தில் போலீஸ் என்கவுண்டரில் செத்துப்போகும் காலணி தைக்கும் தொழிலாளியின் மனைவியாக நடித்திருப்பார். அவருக்கான இழப்பீட்டுத் தொகையைக் கொடுப்பதில் அரசு அலுவலர்கள் காலதாமதம் செய்துவருவார்கள்.
அனைத்து அரசு முறைகளையும் முடித்து உயர் அலுவலர் இழப்பீடு வழங்குவதற்காக மனோரமாவை அழைப்பார். அப்போது, அந்த அலுவலரும் கையூட்டு கேட்க, மனமுடைந்து அவரைத் தூற்றுவதுபோல் மனோரமா அந்தக் காட்சியில் நடித்திருப்பார்.
கையூட்டுப் பெறுவது அரசு அலுவலர்களால் விளிம்புநிலை மக்கள் எந்த மாதிரியான துயரங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை அந்தக் காட்சி ரசிகர்களுக்கு கடத்தினால்தான், இந்தியன் திரைப்படத்தின் மையக்கரு உயிர்ப்புடன் இருக்கும். அந்தக் காட்சியில் நடிக்க மனோரமாவைத் தேர்ந்தெடுத்தது படக்குழுவின் முக்கியமான முடிவாகும்.
மண் அள்ளித்தூற்றி அரசு அலுவலரைத் திட்டிவிட்டு, கண்ணீருடன் மயங்கி விழும் மனோரமாவை பார்த்தால் நமக்கே அந்த அலுவலரை அடிக்கத் தோன்றும்.
15 நிமிடம்கூட இல்லாத அந்தக் காட்சியில் மனோரமா அப்படி நடித்திருப்பார். அவர் ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பது திரையுலகின் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
அதனால்தான் திரைப்படவானில் மனோரமா என்றும் ஜொலிக்கும் நட்சத்திரம்!