உலகின் பொதுமொழியாம் காதல், நம் ஊரின் பெரும்பான்மை மக்களால் விரும்பிப் பார்த்து ரசிக்கப்படும் கலை வடிவமான, சினிமா ஊடகத்தின் வழியே காட்சிப்படுத்தப்படும்போது, காலத்தால் அழியாப் படைப்புகளாக அவை விஞ்சி நிற்கின்றன. 90 ஆண்டு கால நம் தமிழ் சினிமா வரலாற்றில், இவ்வாறு காலத்தால் அழியாக் காதல் திரைப்படங்களாக விஞ்சி நிற்கும் முக்கியமான தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றைக் காணலாம்.
50களின் காதல் கதை:
அம்பிகாபதி: தமிழ் இலக்கிய வரலாற்றின் ரோமியோ, ஜூலியட்டான அம்பிகாபதி - அமராவதியின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படமும், அதன் பாடல்களும் தமிழ் சினிமா வரலாற்றில் இயற்றப்பட்ட ஒரு அழகிய காதல் காவியம். ”அன்பே... இன்பம்., எங்கே... இங்கே” எனக் கேட்ட மாத்திரத்தில் உருக வைக்கும் பாடல்களைக் கொண்ட இத்திரைப்படம், தங்களின் நிறைவேறாத காதல் பக்கங்களை மக்களை நினைவுகூற வைக்கும் ஈர்ப்பை இன்றும் அப்படியே தக்கவைத்து நம்மைக் கட்டிப்போடும் வல்லமை கொண்டது.
தேன் நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம் - இது 60 களின் காதல்!
தேன் நிலவு: மணிரத்னத்தின் ஓகே கண்மணி இன்றைய இளைஞர்களிடம் ஏற்படுத்தியத் தாக்கத்திற்கும் கொஞ்சமும் குறைவில்லாமல், 60களின் இளைஞர்களைக் கொண்டாடி ரசிக்க வைத்த திரைப்படம் பெரும் இயக்குநர் ஸ்ரீதரின் 'தேன் நிலவு'. அழகான கதைக்களம், அதையும்விட திரையில் மிகப் பொருத்தமான ஜோடியாக வலம்வந்து படத்திற்கு உயிரூட்டிய ஜெமினி கணேசன் - வைஜெயந்தி மாலா ஜோடி, குதிரைக் குளம்பொலியின் பின்னணியில் பாட்டுப் பாடவா, ஓஹோ எந்தன் பேபி, சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் என இன்றும் அதே காதலைக் கடத்தும் பாடல்கள் என இப்படம் இன்றும் திரை வழியாக அறுபதுகளில் கடத்திய அதே புத்துணர்ச்சியைக் கடத்த தவறுவதில்லை.
தேன் நிலவு மூலம் மகிழ்ச்சிப் பொங்கும் காதலை திரையில் கடத்திய அதே ஸ்ரீதர் தான் ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ மூலம் ஒருதலைக் காதலின் வீச்சையும், அதன் ஆழத்தையும் தமிழ்த் திரையுலகின் தீராப் பக்கங்களில் தீட்டிச் சென்றுள்ளார். காதலியின் கணவரை நோயிலிருந்து மீட்டெடுக்க உதவும் முன்னாள் காதலன், இந்த மூவரின் புரிந்துணர்வுகள், இவர்களின் காதலை பாடல்களில் கடத்திய கண்ணதாசனின் வரிகள் என, தமிழ் சினிமாவின் காதல் திரைப்படங்களுக்கான திரைமொழியில் இப்படம் ஒரு மைல்கல்.
70களின் காதல் கதைகள் :
இளமை ஊஞ்சலாடுகிறது: 60களின் முக்கோணக் காதலை விவரித்த நெஞ்சில் ஓர் ஆலயத்தின் 70களின் வெர்ஷன் ’இளமை ஊஞ்சலாடுகிறது’. படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு அன்றைய இளம் நடிகர்களான கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீப்பிரியா என இளமை ததும்பும் நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டு எடுக்கப்பட்டது இந்தத் திரைப்படம், ”அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை, இந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை” என காதலின் ஏமாற்றத்தைப் பொட்டில் அறைந்து கேள்வி எழுப்ப பலருக்கும் இன்றளவும் உதவிகிறது இப்படத்தின் பாடல் வரிகள்.
நிறம் மாறாத பூக்கள்: இருவேறு காதல் கதைகள், காதலர்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும் திரைமொழியை, படத்தின் இயக்குநர் பாரதிராஜா கையாண்டவிதம் இப்படத்தை இன்றளவும் நம்மை ரசிக்க வைக்கிறது. ”கால தேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம், நீ யாரோ, நான் யாரோ, யார் சேர்த்ததோ” எனும் ஜென்ஸியின் காதல் ததும்பும் குரலும், இளையராஜாவின் இசையுமே இப்படத்தின் ஆன்மா.
80களின் காதல் கதை:
காதலுக்கு மொழி ஏது என மொழிகள் கடந்த காதலை திரையில் ’ஏக் துஜே கேலியே’ மூலம் கடத்தி திக்குமுக்காட வைத்தார் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர். தமிழ் மொழி கடந்து இந்திக்கு சென்று ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதையும் ஆக்கிரமிக்க அவர் எடுத்த ஆயுதம் காதலே!
”விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே” என மதங்கள் கடந்த இளமை பொங்கும் காதலை ’அலைகள் ஓய்வதில்லை’ வழியே பாரதிராஜாவும், ஒருதலைக் காதலையும் அதன் வலியையும் ’ஒரு தலை ராகம்’ வழியே டி. ராஜேந்தர் பெரும் வணிக வெற்றியுடன் பதிவு செய்ய, ’மௌன ராகம்’ மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்தார் மணிரத்னம். ஒரு தரம் ரேவதி, ஒரு தரம் கார்த்திக், ஒரு தரம் மோகன் என ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் நம்மை ஈர்க்கும் வேறு வேறு கதாபாத்திரங்கள் அவை உணர்த்தும் நியாயங்கள் என அன்று தொட்டு இன்று வரை தமிழ் சினிமா கண்ட அழகிய காதல் கதையாக மனதை வருடுகிறது ’மௌனராகம்’.
90களின் காதல் கதைகள்:
கையில் ஒற்றை ரோஜாவை வைத்துக் கொண்டு சுற்றுபவரை 'இதயம்' முரளி என அழைக்கும் அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, சொல்லப்படாத காதலின் வலியைக் கடத்தியது கதிரின் இதயம்.
80களின் இறுதியில் தொடங்கி, 90களின் ஆரம்பம் காலம் வரை இந்த ஜானர் காதல் கதைகள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்தாலும், புது ரூட்டில் பயணித்து, மலையாள இயக்குநர் ஃபாசில் தமிழ் சினிமாவிற்கு அளித்த கொடையான காதலுக்கு மரியாதை, காதலர்களையும், அவர்கள் குடும்பத்தையும் இணைக்கும் பிணைப்பை உணர்த்தி, குடும்பங்கள் இன்றைக்கும் கொண்டாடி ரசித்துப் பார்க்கும் காதல் திரைப்படமாக விளங்குகிறது.
20ஆம் நூற்றாண்டின் காதல் திரைப்படங்கள்:
80களுக்கு ஒரு மௌனராகம் என்றால், ”கூந்தல் நெளிவில் எழில்கோலச் சரிவில் கர்வம் அழிந்ததடி” என கர்வம் களைந்து 20ஆம் நூற்றாண்டின் இளைஞர்களை காதல் மொழி பேச வைத்தது ’அலைபாயுதே’ திரைப்படம்.
முன்னதாக மொழி, மதம், ஜாதிகளைக் கடந்து காதலைப் பேசிய திரைப்படங்களைக் காட்டிலும் ஒரு படி உயர்ந்து காதலுக்கு இடையூறாக விளங்கும் சாதியத்தின் வீரியத்தையும், வலியையும் பொட்டி அறைந்து சொல்லியது பாலாஜி சக்திவேலின் காதலும், அமீரின் பருத்திவீரனும்.
தமிழ் சினிமாவில் ஆண்களின் கண்ணோட்டத்திலேயே அதிகம் பதிவு செய்யப்ப்பட்ட காதல் கதைகளுக்கு மத்தியில் ஒரு பூ மலரும் அழகோடு மாரியின் கண்ணோட்டத்தில் காதலைப் பதிவு செய்து அணுஅணுவாய் பார்வதியின் மாரி கதாபாத்திரத்தோடு இணைந்து நம்மையும் காதல் வயப்பட வைத்தது இயக்குநர் சசியின் ’பூ’
பழமையும், புதுமையும் கலந்த இன்றைய காதல் திரைப்படங்கள்:
கௌதம் மேனன் இல்லாமல் காதல் திரைப்படங்கள் குறித்த இந்தத் தொகுப்பை நிறைவு செய்ய முடியாது என்கின்ற அளவுக்கு விண்ணைத் தண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் திரைப்படங்களின் மூலம் இளைஞர்களின் மனதை ஆக்கிரமித்து காதல் திரையுலகை குத்தகைக்கு எடுத்துவைத்துள்ளார் கௌதம் மேனன்.
சின்னஞ்சிறு விரல் கேட்டு, லிவ் இன் தாண்டி திருமணத்தில் அடியெடுத்து வைக்கும் கதையான 'ஓகே கண்மணி', காதலே மனிதனின் தனிப்பெருந்துணை என ராம், ஜானுவின் மூலம் உணர்த்தும் '96' என வெவ்வேறு பரிணாமங்களின் காதலை மீட்டெடுத்து காதலின் அழகை தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருக்கும் தமிழ் சினிமாவின் வருங்கால காதல் காவியங்களை எதிர்நோக்கி காத்திருப்போம்...
இதையும் படிங்க: 'ஆதலால் காதல் செய்வீர்' - காதலும்; காதலர் தினமும்!