கரோனா ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த குடிபெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களது வீட்டிற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுத்து நடிகர் சோனு சூட் இலவசமாக அனுப்பினார். பேருந்து மட்டுமில்லாமல், தனி விமானம் மூலமாகவும் சிலரை அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைத்தார்.
அத்துடன் வறுமையில் வாடிய விவசாயி குடும்பத்திற்கு டிராக்டர் வழங்கியது, ஸ்பெயினில் சிக்கித்தவித்த சென்னை மாணவர்களை வீடு திரும்ப, விமான வசதி செய்துகொடுத்தது என்று அடுக்கடுக்காக பல உதவிகளை நடிகர் சோனு சூட் செய்துவருகிறார்.
இந்நிலையில் சோனு சூட் சேவையை கௌரவிக்கும்விதமாக ஆந்திராவில் உள்ள சரத் சந்திர ஐஏஎஸ் அகாதமியில், சோனு சூட் பெயரில் ஒரு தனி துறை தொடங்கப்பட்டுள்ளது.
இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார். முன்னதாக பஞ்சாபின் அடையாளம், சோனு சூட் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.