'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு, சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் 'சூரரைப்போற்று'. இப்படத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நடிகர் சூர்யாவும், குனீத் மோங்காவும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
'ஏர் டெக்கான்' என்ற விமான நிறுவனத்தின் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்ட படமாக 'சூரரைப் போற்று' தயாராகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படம், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30ஆம் தேதி நேரடியாக வெளியாகவுள்ளது.
இதற்கு ஒரு சிலர் ஆதரவும் ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் மணிகண்டன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, 'திரைப்படம் என்பது திரையரங்கில் திரையிட்டால்தான் திரைப்படம். அப்படி வளர்ந்து வந்தவர் தான், கண்ணியமிக்க திரைப்பட நடிகர் சிவகுமார். அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி, மருமகள் ஜோதிகா.
இவர்கள் திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களின் கைத்தட்டலில் தொடங்கி, குறிப்பாக ரசிகர் மன்றத்தினரின் முதல் காட்சி கொண்டாட்டம் வரை என வளர்ந்து பல கோடிகள் சம்பளம் வாங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளனர்.
இந்த கரோனா காலத்தில் அம்பானி முதல் அடித்தட்டு மக்கள் வரைக்கும் கஷ்டப்படும் நேரத்தில், யாரால் எந்த துறையினரால் வளர்ந்து வந்தோமோ அந்த துறையினருக்கு எதிராக அவர்களை பற்றி எள்ளளவும் கவலைப்படாமல், அவரை மட்டும் காப்பாற்றும் எண்ணத்தில் ஓடிடிக்கு படம் கொடுப்பேன் என்பது இரக்கமற்ற செயல்.
கருணை கூர்ந்து அந்த முடிவை மாற்றி கலைத்துறையை காக்கும்படி "காக்க காக்க கனகவேல் காக்க" என்று கேட்டுக்கொள்கிறோம்' என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.