சென்னை: கரோனோவை வெல்வோம் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிக்கு அழைப்புவிடுத்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
கரோனோ பாதிப்பிலிருந்து விடுபடுவதற்காகப் பொதுமக்கள் நாளை (மார்ச் 22) வீடுகளில் முடங்கி இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்துதல் தேவைதான். ஆனால் பாவம் அது குழந்தைகளுக்குப் பெரும் சிறையாக இருக்கிறது. எவ்வளவு நேரம்தான் படி படி என்ற வன்முறையை குழந்தைகள் மீது திணப்பது.
மார்ச் 22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நம்மை நாமே வீட்டில் முடக்கி மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள். வரலாற்றுத் தருணம். அன்று புத்தகம் வாசித்தல், தொலைக்காட்சி பார்த்தல், செல்போன் நோண்டுதல், கேரம்போர்டு, சதுரங்கம் விளையாடுதல் தவிர வேறு என்ன செய்யலாம்? அதனால் அன்று 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஒரு ஓவியப்போட்டி அறிவிக்கலாம் என்று தோன்றியது.
வீட்டிலிருந்தபடியே ஏ4 வெள்ளைத்தாளில் வண்ணப்பென்சில் அல்லது சாதாரண பென்சிலில் வரைந்து அலைபேசியில் புகைப்படம் எடுத்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு (vasantabalan@gmail.com) அனுப்பிவைக்கலாம்.
காலக்கெடு 22ஆம் தேதி காலை 10 மணி முதல் 23ஆம் தேதி காலை 10 மணிவரை வரும் மின்னஞ்சல்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகளின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விவரம் இணைக்கப்படுதல் அவசியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக வரைந்து தருவதைத் தவிர்க்க வேண்டும்.
முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு. ஒருவரே எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வரைந்து அனுப்பிவைக்கலாம். தலைப்பு 'கரோனோவை வெல்வோம்'.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அன்பே சிவம், ஆயிரத்தில் ஒருவன் வரிசையில் 'அரவான்'