தமிழில் கார்த்தி - தமன்னா நடிப்பில் வெளியான 'சிறுத்தை' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சிவா. இந்த படத்தைத் தொடர்ந்து இவர் அஜித்துடன் கூட்டணி அமைத்து 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' என நான்கு படங்களை இயக்கி கமர்ஷியல் இயக்குநராக வலம் வருகிறார்.
இவர் தற்போது ரஜினியை வைத்து 'அண்ணாத்த' திரைப்படத்தை இயக்கி வருகிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் வசித்து வந்த சிவாவின் தந்தை ஜெயக்குமார் (72) உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(நவ.27) மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மரணமடைந்த ஜெயக்குமார் சினிமா துறையில் இயக்குநராகவும், புகைப்பட கலைஞராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.