தமிழ் சினிமா உலகின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர், ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய முதல்வன், ஜீன்ஸ், காதலன் இந்தியன் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப்பெற்றன. அந்நியன், சிவாஜி போன்ற படத்தின் மூலம் சமூகம் சார்ந்த கருத்துக்களை தெளிவான காட்சிகளுடன் மக்களின் மனதில் பதிய வைத்தவர் ஷங்கர். தமிழ் சினிமாவில் அவரது வளர்ச்சி பிற இயக்குநர்களை வியந்து பார்க்க வைத்தது.
பிரம்மாண்டம் என்றால் இயக்குநர் சங்கர்தான் அவருக்கு நிகர் அவரே. இந்நிலையில், இயக்குநர் சங்கர் தமிழ் சினிமாவிற்கு வந்து 25 வருடங்களை கடந்து விட்ட நிலையில், இதனைக்கொண்டாடும் விதமாக சக இயக்குனர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த அற்புத நிகழ்வை கொண்டாடும் விதமாக இயக்குநர் மிஷ்கின் தனது அலுவலகத்தில் அனைத்து இயக்குநர்களையும் ஒருங்கிணைத்து ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் கேக் வெட்டி பிற இயக்குநர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்வில், இயக்குநர்கள் மணிரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன், சசி, லிங்குசாமி, பா.ரஞ்சித், எழில், பாண்டிராஜ், மோகன் ராஜா, மற்றும் அவரது உதவி இயக்குநர்களான பாலாஜி சக்திவேல், வசந்த பாலன், அட்லீ ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இயக்குநர் சங்கரைத் தவிர மற்ற இயக்குநர்கள் நீல நிறத்தில் 'S25' என பொறிக்கப்பட்டிருந்த பனியன்களை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.