தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற திரைப்படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்காக இரங்கற்பா ஒன்றை எழுதியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ”கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னலமின்றி சிகிச்சை அளிக்கும்போது, கரோனா தொற்றால் தன்னுயிரை இழக்கும் மருத்துவர்களின் இறப்பு எனக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அவர்களின் தகன நடவடிக்கைகளை நினைக்கையில் இதயத்தைத் துளைக்கும் சம்பவமாக இருந்தது. இந்த சோகத்தால் தூண்டப்பட்டு, பாதிக்கப்பட்டு, எழுதியதுதான் இந்த இரங்கற்பா” என்றார்.
அவர் எழுதிய இரங்கற்பா பின்வருமாறு...
"உமைக் காக்க
தொட்டுத் தூக்கிய
மருத்துவன் மாண்டான்
வாழவா வழி கேட்டான்
அந்தோ சிதை நெருப்பை
தானம் கேட்டான்
தர மறுக்கும்
மனித மனமே
நீ கைசுத்தம்
செய்தல் போல்
மனச்சுத்தம் செய்வாயா ?
சமபந்தி வைத்த வைத்தியனை
வைத்தெரிக்க கொள்ளி
இல்லையா..?
சாதி பார்த்தா
இனம் பார்த்தா
மொழி பார்த்தா
வந்து வேக வைக்கிறது
கிருமி..
இருமாமல்
துப்பி விடு
உன் சாதியை
உன் மதத்தை
அய்யோ
கிருமி மனித
இனத்தை தேடுகிறது."
இதையும் படிங்க... ’கேடு காலத்தில் அனைவருக்கும் உதவ வேண்டும்’- ரவிவர்மா வேண்டுகோள்