சினிமாக்களில் காட்டப்படுவதைப்போல மரம், காதலர்கள் சுற்றி வருவதற்கு மட்டுமானதல்ல, சுவாசத்திற்கான அடிப்படையே மரம்தான் என்று இயக்குநர் பிரபு சாலமன் கூறியுள்ளார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. இப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரபு சாலமன், ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் படம் குறித்து பிரபு சாலமன் கூறுகையில், ”காடன் படம் சிறு பொறியாகத் தெரிந்தாலும் புரட்சித் தீயாகப் பரவும் என நம்புகிறேன். இப்படம் ஜாதங் பியான் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஜாதங் பியான் 2015இல் பத்மஸ்ரீ விருது பெற்றவர். அப்துல்கலாமுக்கு நெருக்கமானவர். இவர் பிரம்மபுத்திரா நதியோரம் பல ஆயிரம் ஏக்கரில் காட்டை உருவாக்கியுள்ளார். 'கும்கி' படத்தில் அவரை பற்றிப் பேசாமல் கடந்து விட்டோம். காட்டை அதிகம் நேசிப்பவன் நான். அசாமின் காசி ரங்கா என்ற பகுதியில் பன்னாட்டு நிறுவனத்தால் கட்டடம் கட்டப்பட்டு யானைகளின் வழித்தடம் அடைக்கப்பட்டது.
நமக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே மெரினாவிலும் சாலையிலும் நின்று போராடுகிறோம். ஆனால் யானைகளின் பிரச்னையை யாரால் பேச முடியும். உலகின் மொத்த யானைகளின் எண்ணிக்கையில் 55 விழுக்காடு இந்தியாவில்தான் இருந்தது. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை குறைந்துவருகிறது. யானையின் சாணத்திலிருந்தே பல மரங்கள் முளைக்கும்.
ஊட்டியிலும் யானைகளின் வழித்தடத்தில் சுவர்கள் கட்டப்பட்டுள்ளதாகச் செய்திகள் வலம்வந்தன. இதைத் திரைக்கதையாக எடுத்துள்ளோம். படத்தில் உண்மை சிதையாமல் இருக்க வேண்டும் என்பதால் வியட்நாம், தாய்லாந்து நாடுகளுக்குச் சென்று படம் பிடித்தோம்.
படத்தைப் பார்ப்பவர்களின் மனதுள் உண்மையை உரக்கச் சொல்லி உத்வேகத்தைக் கொண்டுவரும். மாறன் என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இன்று பல நடிகர்கள் கதை கேட்கவே நேரம் ஒதுக்குவதில்லை. ஆனால் விஷ்ணுவிடம் தொலைபேசியில் பேசினாலே படப்பிடிப்புக்கு வந்து விடுவார்.
சினிமாக்களில் காட்டப்படுவதைப்போல மரம், காதலர்கள் சுற்றி வருவதற்கு மட்டுமானதல்ல; சுவாசத்திற்கான அடிப்படையே மரம்தான். பசுமை எல்லோருக்கும் பிடித்தமானது” என்றார்.