நடிகர் பார்த்திபன் தனது 'ஒத்த செருப்பு', திரைப்படத்தில் பலரால் வெகுவான பாராட்டுகளைப் பெற்றார். அவரே எழுதி, இயக்கி தயாரித்து இருந்த அந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, அதன் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் நவாசுதீன் சித்திக்கை வைத்து இயக்க பார்த்திபன் திட்டமிட்டிருந்தார். அதை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யவும் சில தயாரிப்பு நிறுவனங்களை அணுகினார். தற்போது புதிய முயற்சியாக ஒரே ஷாட்டில் எடுக்கப்படும், 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்குகிறார்.
இதற்கிடையில் அண்மையில் ஒரு நேர்காணலில் 1999ஆம் ஆண்டு வெளியான 'ஹவுஸ் ஃபுல்' என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை எடுக்க உள்ளதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.
விக்ரம், சுவலட்சுமி நடித்திருந்த இந்தத் திரைப்படத்தில் பார்த்திபன் திரையரங்கு உரிமையாளராக நடித்திருந்தார். இதன் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் அமிதாப் பச்சனை வைத்து இயக்க பார்த்திபன் திட்டமிட்டு இருக்கிறார்.
அந்தத் திரைப்படத்தின் டிவிடி ஒன்றை, நடிகர் அமிதாப் பச்சனுக்கு தயாரிப்பாளர் ஒருவர் மூலமாக பார்த்திபன் அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார், அந்த திரைப்படத்தை ஒப்புக்கொண்டால் அது படமாகலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்!