இயக்குநர் ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. இதில் பார்த்திபன், பாக்கியராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ள இத்திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் கரோனா சூழல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக OTT-இல் வெளியாகவுள்ளது என தகவல் கசிந்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் இருந்து ஆதரவுக் குரலும் எழுந்தது. தற்போது இந்த விவகாரத்தில், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா ஆகிய படங்களை இயக்கியர் இயக்குனர் ஹரி உத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ஒரு திரைப்படம் எடுப்பது மிகவும் கடினம். அந்தக் கஷ்டம் கருத்து கூறுபவர்களுக்கு தெரியாது. ஆகையால் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேசான் பிரைம்-இல் வெளியாவதை அனைவரும் வரவேற்போம். இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.