சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அவமதிப்பதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, தமிழ் சமூகத்தின் சொத்தான அவரை அவமதித்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று இயக்குநர் வ. கெளதமன் தெரிவித்துள்ளார்.
தன்னைக் குறித்து பாலிவுட்டில் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து அவருக்கு ஆதரவாக குரல் எழுந்து வரும் நிலையில், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"இன்று நேற்றல்ல, பன்னெடுங் காலமாகவே தமிழ் நாட்டின் திரைக்கலைஞர்களை மும்பை திரையுலகம் புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் அவமானப்படுத்தி அனுப்பும் வரலாறுகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதே நிலைதான் இன்று எங்களின் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஏற்பட்டிருக்கிறது. இது வருத்தத்துக்குரியது மட்டுமல்ல, கடும் கண்டனத்துக்குரியது.
உலகத்துக்கே தனி நாகரீகத்தை கற்றுக் கொடுத்து, கலைக்கு உயிர் கொடுத்தவன் தமிழன். உலகமெங்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டிவிட்டு வந்தானேயொழிய, எந்த நாட்டையும் இது தனக்குதானென்று அவன் ஆக்கிரமிக்கவோ, ஆளுகை செய்யவோ விரும்பியதில்லை.
தன் திறன் மீது தணியாத நம்பிக்கை தமிழ்குடிகளுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான் எங்கள் சொத்தை இன்றும் நாங்கள் கலையாக வைத்திருக்கின்றோம். ஆனால் வட மாநிலத்தவரோ இங்கு வந்து, எங்கள் சொத்தை மலை மலையாக குவித்து வைத்திருக்கிறார்கள்.
சென்னை போன்ற பெரும் நகரங்கள் தொடங்கி தமிழ்நாட்டின் பல மாவட்ட எல்லைகளில் வட மாநிலத்தவரின் ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது. ரயில்வே பணியிடங்கள் முதற்கொண்டு, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும், அரசியல் அதிகாரத்திலும் நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம். இப்படிப்பட்ட சூழலிலும் தன் இசைத்திறமையால் உச்சம் தொட்ட ஒரு மகா கலைஞனை அவமதிப்பதென்பது அறமற்ற செயல்.
தேசிய விருதுகளையும், உலகப்புகழ் பெற்ற கிராமி விருது உள்பட ஆஸ்கர் விருதுகளை குவித்த ஏ.ஆர்.ரஹ்மானை, படைப்புகளில் பயன்படுத்தவில்லையென்றால் ஒருபோதும் இழப்பு அந்த கலைஞனுக்கில்லை, சம்மந்தப்பட்டவர்களுக்குத்தான்.
வாய்ப்பை தட்டிப்பறிப்பதைக் கூட நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் உயிராக நேசிக்கின்ற எங்களின் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் 'கண்ணா மூச்சு ஏனடா' பாடலை கேட்டுவிட்டு அப்பொழுதே 'இந்த தமிழ் இளைஞன் இசையால் இவ்வுலகை ஆளப்போகிறான்' என்றார்.
இந்தியில் எண்ணி பார்த்தால் பத்து, பதினைந்து படங்கள் கூட இசையமைத்திருக்க மாட்டார். அதற்குள் இவ்வளவு பிரச்னைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் அங்கிருந்து வந்த ஒருவர் நூற்றைம்பது படங்களுக்கு மேல் நடித்து, நாற்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டின் சூப்பர்ஸ்டாராக வலம் வருவதோடு மட்டுமல்லாமல், ஐம்பதினாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் தமிழ் நிலத்தையும் ஆளத் துடிக்கிறாரே? அப்படியெனில் நீங்களெல்லாம் புத்திசாலி நாங்களெல்லாம் முட்டாள்களா என்ன?
மும்பைத் திரைத்துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணியில் இருப்பவர்களின் பின்னணியை தெரிந்து கொண்டு, அவர்களுக்கு பிரச்னை கொடுப்பதை வட மாநிலத்தவர்கள் இதன் பிறகாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் தமிழர்கள் மௌனம் காக்க மாட்டார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வது அவர்களுக்கு நல்லது. இல்லையெனில் எங்கள் கலையை காக்க தமிழ்ச் சமூகம் திரண்டெழும் சூழல் உருவாகும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "எனக்கு எதிராகப் பாலிவுட்டில் வதந்தி பரப்புகிறார்கள் "- ஏ ஆர் ரகுமான்!