சென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில் இயக்குநர் பிரபுராஜா என்பவர் 2013ஆம் ஆண்டு முதல் உணவுக் கடை நடத்திவருகிறார். இந்தக் கடை செயல்பட்டுவரும் கட்டடத்தின் உரிமையாளர் சுந்தரகணேஷ், குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வியாபாரத்தில் தொய்வு ஏற்படவே செந்தில் என்பவருடன் பிரபுராஜா லாபத்தில் 10 விழுக்காடு தரவேண்டும் என வியாபார ஒப்பந்தம் செய்துள்ளார். இதனிடையே திரைப்பட வாய்ப்பு கிடைக்கவே 'படைப்பாளன்' என்னும் திரைப்படத்தை இயக்கி நடித்துவருகிறார்.
படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த பிரபுராஜாவுக்கு தெரியாமல் செந்தில், உரிமையாளர் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 சதுர அடி கடையை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்றுள்ளார்.
இதனையறிந்த பிரபுராஜா தனியார் கட்டுமான நிறுவனத்திடம் விசாரித்தபோது, செந்தில் செய்த முறைகேடுகள் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிரபுராஜா காவல் ஆணையர் அலுவலகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்டவற்றில் செந்தில் மீது புகாரளித்துள்ளார்.