'பாரதிகண்ணம்மா', 'பொற்காலம்', 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன் கடைசியாக 'திருமணம்' என்ற படத்தை இயக்கியிருந்தார். உமாபதி, கவிதா, சுரேஷ், தம்பி ராமையா, மனோபாலா, சுகன்யா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றாலும், பெரிய அளவில் கலெக்சனை அள்ளவில்லை. இப்படத்தை வழக்கம்போல பலபேர் பைரசி மூலமே அதிகபேர் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் குறித்த கருத்து ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “நண்பர்களே... குற்ற உணர்விலிருந்து விடுபட ஒருவாய்ப்பு. திருமணம் படம் தியேட்டர்ல பாக்க முடியல.. அதுனால பைரசில பாத்தேன்னு சொல்றவங்க அதற்கான தொகையை இந்த அக்கவுண்ட்க்கு அனுப்பவும்.
பேங்க் சென்றெல்லாம் அலைய வேண்டியதில்லை. போன் மூலமாக அனுப்ப வசதியுள்ளது. நல்ல திரைப்படம் என்று பாராட்டுபவர்களும், எங்கள் குடும்பத்தோடு சேரன் சார் படம் பார்ப்போம் என வாய் நிறைய சொல்லும் அன்பானவர்களும், தியேட்டரில் பார்க்க வாய்ப்பில்லை என்ன செய்ய என வருந்துபவர்களுக்கும் இது தீர்வு.
'ஆட்டோகிராஃப்' வெளியானபோது இப்படி ஒரு அறிவிப்பை விளம்பரமாக கொடுத்தேன். தொடர்பு வசதிகள் அவ்வளவு இல்லாத காலக்கட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் ஒரு நபருக்கு 100 ரூபாய் என்று அனுப்பினார்கள். இப்போது நம் மக்கள் என்ன செய்கிறார்கள் என பார்க்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.