'ஆரண்ய காண்டம்' படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஃபாகத் ஃபாசில், மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த இந்தப் படம் பலரது பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பெற்றுவருகிறது.
இந்நிலையில் படத்தைப் பார்த்த இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாழ்க்கை பற்றி சாமி பற்றி எதுநல்லது எதுகெட்டது, யார் நல்லவர் யார் கெட்டவர் என நிறைய கேள்விகள் அவ்வப்போது நமக்கு தோன்றும். அதைத்தான் படமும் கேட்கிறது. உள்ளூர ஆயிரம் வக்கிரமங்களை அடக்கி வைத்திருக்கும் நம்முகம் காட்டுகிறது.
கூவம் நம்மைச்சுற்றி ஓடவில்லை நம்முள்தான் ஓடுகிறது. சூப்பர் டீலக்ஸ்
முதலில் அரவாணியாக நடிக்க சம்மதித்தது. அதிலும் அரவாணிகளின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டுவர சம்மதித்து ஒப்பனையில் காட்டியது. தன்னை பற்றிய இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் தொழில், திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்த அந்த நடிகன்.
சல்யூட் விஜய்சேதுபதி! இன்னொரு சிவாஜி...
ஆபாச வார்த்தைகள் காட்சிகள் இருந்தாலும் முற்றிலும் புறந்தள்ள முடியாத சினிமாதான் சூப்பர் டீலக்ஸ். காட்சி வடிவமைப்பு, ஒளிப்பதிவு, தேர்ந்தெடுத்த லொகேசன்கள், நடிகர் நடிகைகளின் தேர்வும் நடிப்பும் என இயக்குனரின் உழைப்பு அபாரமாக தெரிகிறது. அடுத்த ஐந்து வருடங்களில் இதுபோல சினிமாக்கள் அதிகம் வரும்" என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.