'நவரசா' ஆந்தாலஜி திரைப்படத்தில் கருணை உணர்வை மையமாக வைத்து விஜய் சேதுபதி நடித்து எடுக்கப்பட்ட குறும்படம் 'எதிரி'.
இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கியுள்ள இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் நடிகை ரேவதி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் நாளை 'நவரசா' (ஆகஸ்ட்.06) வெளியாகிறது.
இப்படத்தில் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து இயக்குநர் பிஜோய் நம்பியார் கூறியதாவது, 'எழுத்தாளரும் நடிகருமான நமகரந்த் தேஷ்பாண்டே ஒரு முறை என்னிடம், நீங்கள் விரும்பும், குருவாக மதிக்கும், ஆளுமையுடன் பணிபுரியும்போது கவனமாக இருங்கள்.
மணிரத்னம் மீது அதிகமான பிரமிப்பு
நீங்கள் அவரைப் பார்த்து வளர்ந்திருப்பதால், அவர்களுடன் பணிபுரிவது சில தருணங்களில் அவர்களின் மகத்துவத்தை, அவர்கள் மீதான உங்களின் கற்பனை பிம்பத்தை அழித்துவிடும். ஆதலால், அம்மாதிரி வாய்ப்புகளை, தவிர்ப்பது நல்லது என்றார்.
ஆனால், என் விஷயத்தில் அது நடைபெறவில்லை. இளமையில் நான் பார்த்து பிரமித்த, மணி சார் உடன் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது எனது பாக்கியம்.
அவருடன் பணிபுரிந்தபோது அவர் மீதான பிரமிப்பு அதிகரிக்கவே செய்தது. அவருடன் பணியாற்றிய நாள்கள் என் வாழ்நாளின் பொன் தருணங்கள்' என்றார்.
விஜய் சேதுபதியுடன் கதை விவாதம்
தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் பணியாற்றியது குறித்து பிஜோய் நம்பியார் கூறியதாவது, ' 'எதிரி' படத்தில் பல காட்சிகளுக்காக, நானும் விஜய் சேதுபதியும் ஒன்றாக அமர்ந்து விவாதித்துள்ளோம். பல உரையாடல்களை மீண்டும் எழுதினோம்.
நடிகர்கள் தங்கள் நடிப்பில் தங்களை எந்தளவு ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதை விஜய் சேதுபதியிடம் கண்டு ஆச்சரியம் அடைந்தேன். விஜய் சேதுபதி அவரது காட்சிகள் மட்டுமின்றி, மொத்தப் படத்தையும் மேம்படுத்தினார்.
வசனம் எழுதிய விஜய் சேதுபதி
இப்படத்தில் ரேவதி பேசிய இறுதி வசனத்தை விஜய் சேதுபதி தான் எழுதினார்.
திரைக்கதையில் அவரது பங்களிப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது. டைட்டிலில் திரைக்கதையில் அவரது பெயரையும் இணைத்துள்ளேன். இப்படத்தை உருவாக்க, என்னுடன் உண்மையாக ஒத்துழைத்த, அர்ப்பணிப்புள்ள நடிகர்களைப் பெற்றது எனது அதிர்ஷ்டம்' என்றார்.
இதையும் படிங்க: இயக்குநர் பிரியதர்ஷனுடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் - நடிகை ரம்யா நம்பீசன்