தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் தேசிய அளவில் கவனம் பெற்று இருந்தாலும், கோலிவுட்டின் ட்ரெண்ட் செட்டை மாற்றியமைத்தவர் பாலா. அவர் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின்பால் கொண்ட அன்பு தமிழ் சினிமாவில் காத்திரமானவை. நடிகர்களின் இன்னொரு முகத்தைக் கண்டறியும் தைரியம் பாலாவிற்குச் சாத்தியம்.
அதன்பிறகு அவர் இயக்கிய 'நந்தா', அதுவரை தமிழ் சினிமாவில் தொப்புள் கொடி உறவான ஈழத்தைப் பற்றி பேசாத நேரத்தில் வெகுஜன மக்களுக்கு எடுத்துரைத்தார். அப்படத்தில், காட்சியமைப்புகள், கதாபாத்திரங்களின் தேர்வு, இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆகியோர் படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றனர்.
'ஓராயிரம் யானை கொன்றால் பரணி' அதில் நா. முத்துக்குமாரும் யுவனும் சேர்ந்து ஒட்டுமொத்த சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒருவனின் வலியை ரசிகர்களின் காதுகளுக்கு கடத்தியிருப்பார்கள். அதேபோல் 'கள்ளி அடி கள்ளி' பாடலிலும் யுவன் சங்கர் ராஜாவும் தாமரையும் உலகிற்கே ஒரு ஈழப் பெண்ணின் வலியை, அவளின் எதிர்பார்ப்பை, அவளின் வாழ்வின் முறையை ரசிகனின் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்குச் செதுக்கியிருப்பார்கள்.
இவையனைத்தும் சாத்தியமானது பாலாவால் மட்டுமே. பாலாவின் படைப்புகள் எப்போதும் ஒரு முரட்டுத்தனமாக இருக்கும். அந்தக் கோபம் பாலாவின் தனிப்பட்ட கோபம் இல்லை. பாலாவிற்கு இந்தச் சமூகத்தின் மீதுள்ள கோபம். 'பிதாமகன்' எப்போது பார்த்தாலும் அவரின் ஃபினிஷிங் டச் சித்தன் (விக்ரம்). சித்தன் ஒரு சுடுகாட்டில் வளர்ந்து பொதுஜனத்தோடு கலக்க விரும்புகிறார்.
ஆனால், அப்போது பொதுஜனம் சித்தனை எவ்வாறு பார்க்கிறது என்று படம் பார்த்தால் புரியும். நட்பிற்கு எப்போது பாலா புது இலக்கணம் எழுதுவார். ஏனெனில், அவர் நட்பால் வளர்ந்தவர். நட்பால் வந்தவர். நட்பால் இருப்பவர். அவரின் ஒட்டுமொத்த படங்களிலும் நட்பிற்கு என்று ஒரு தனி அதிகாரம் இருக்கும். அவரின் படங்களை உன்னித்துப் பார்த்தால் தெரியும். துயரம் என்பதைச் சற்றும் உணராதவர்களைக் கூட, இவரின் படைப்புகள் கண்கலங்க வைக்கும்.
பாமர மக்களும் புரிந்துகொள்ளும் பாலாவின் கதைக்களம், சிறந்த ஆய்வுக்கான தகுதியுடையது. 'நான் கடவுள்' என்ற திரைப்படத்தைப் பார்த்த பிறகு நான் தான் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருந்த பலருக்கு சம்மட்டியால் அடி கொடுத்தார். அந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் மரணம் ஒரு தண்டனை அல்ல; விடுதலை என்பதை ஆணித்தனமாக நிரூபித்திருப்பார்.
நம்மைப் பொறுத்தவரை விளிம்பு நிலை மக்கள் எப்போதும் சோகத்துடன்தான் இருப்பார்கள் என்று ஒரு பார்வை உண்டு. ஆனால், விளிம்புநிலை மக்களுக்குள்ளும் ஒரு கொண்டாட்டம், ஒரு ஆர்ப்பரிப்பு, வாழ்க்கையை இலகுவாக அணுகும் நல் மனம் படைத்தவர்கள் என்பதை பாலா மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்.
பாலாவைப் பற்றி யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், அவரிடமிருந்த பற்று கொஞ்சம் விலகியிருந்ததே ஒழிய அவரிடமிருந்து கோலிவுட் இன்னும் விலகவில்லை. அவரைப் பொறுத்தவரை, 'என் கடன் பணிசெய்து கிடப்பது' என்பதே. ஆயிரம் வர்மாக்கள் பாலாவை ஒதுக்க நினைத்தார்கள். ஆனால், பாலாவை தமிழ் சினிமா என்றுமே ஒதுக்காது. அதற்கு மிக முக்கியக் காரணம் விளிம்பு நிலை மக்கள்.
அவர் தனது முதல் படத்திலும் தான் கடைசியாக எடுத்த படத்திலும், ஏன் அவரின் கடைசிப் படம் வரையிலும் விளிம்பு நிலை மக்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். ஏனெனில், இந்த தமிழ்ச் சினிமாவை உயிர்ப்போடு வாழ வைப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள் மட்டுமே. அவர்களின் வலியை அழுக்கு இல்லாமலும், அவர்களின் சிரிப்பின் தூய்மை மாறாமலும் அவர்களின் வாழ்வியலை அணுஅணுவாகக் காட்சிப்படுத்தியவர் பாலா மட்டுமே. பிறந்தநாள் வாழ்த்துகள் பாலா!