2017ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் 'அர்ஜூன் ரெட்டி'. இப்படம் தெலுங்கு சினிமாவில் கமர்ஷியல் பார்முலாவை உடைத்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனிலும் கல்லா கட்டியது. தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த 'அர்ஜூன் ரெட்டி' தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க ஒப்பந்தமானார். பாலா இயக்கத்தில் 'வர்மா' என்ற பெயரில் உருவான இப்படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காததால் இப்படம் மீண்டும் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், 'அர்ஜூன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் வங்காவின் உதவி இயக்குநர் கிரிஷய்யா 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் இயக்கி வந்தார். ஈ4 என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பூஜைகள் தொடங்கி உள்நாடு, வெளிநாடு என மாறி மாறி படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் வெளியான 'ஆதித்யா வர்மா' படத்தின் டிரைலர் அப்படியே அர்ஜூன் ரெட்டியை பார்த்தது போல் உணர்ந்தனர்.
எந்த மாற்றமும் இல்லாமல் துருவ் விக்ரம் நடிப்பு பிரமிக்கும் வகையில் இருந்தது. இந்நிலையில் 'ஆதித்யா வர்மா' படப்பிடிப்பு நிறைவடைந்த வீடியோ வெளியானது. படப்பிடிப்பின் கடைசி நாளில் விக்ரமும் கலந்துக் கொண்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நாயகிக்கு முத்தம் கொடுத்து துருவ் விக்ரம் நடந்து செல்வதுபோல் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியில் ரீமேக்கான 'கபீர் சிங்' பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் பாலிவுட் ஸ்டார்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. அதேபோன்று தமிழிலும் துருவ் விக்ரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.