'வடசென்னை', 'மாரி 2' படங்களுக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அசுரன்’ படத்தில் தனுஷ் கவனம் செலுத்திவருகிறார். ‘ஆடுகளம்’ படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றதன் மூலம் இந்திய அளவில் அவர் கவனிக்கப்பட்டார். அதன்பிறகு ’The Extraordinary Journey of the Fakir’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் கவனம்பெற்றார். கடந்த ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது.
ஒய்நாட்எக்ஸ் (Ynotx) நிறுவனம் விநியோகம் செய்யும் இந்தப் படத்துக்கு ‘வாழ்க்கைய தேடி நானும் போறேன்’ என பெயர் சூட்டப்பட்டிருந்தது. தற்போது ‘பக்கிரி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என ஒய்நாட்க்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.