ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், அனிருத், தயாரிப்பாளர் சுபாஷ் கரன், சுனில் ஷெட்டி, கதாசிரியர் கலைஞானம், நடிகர் அருண்விஜய், விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழா தொடங்குவதற்கு முன்பு அரங்கத்தில் ரஜினிகாந்த் நடித்து புகழ்பெற்ற திரைப்பட வசனங்கள், பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. இதனை அதிகமான ரசிகர்கள் ஆரவாரத்தோடு கேட்டு மகிழ்ந்தனர்.
இந்த விழாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், ‘மேடையில் நிற்பதை விட ரசிகர்களோடு சென்று அமர்ந்து விழாவை பார்ப்பது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். ரஜினியின் ரசிகனாக இந்த விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி.
கிராமத்திலிருந்து வந்த நான் சென்னையில் பல போராட்டங்களைக் கடந்துதான் இன்று ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. 70 வயதிலும் சினிமா துறையில் நம்பர்-1 நடிகராக ரஜினிகாந்த் உள்ளார். ரஜினிகாந்த் சினிமா துறைக்கு கிடைத்த வரம்.
பொதுவாக வளர்ச்சியில் இருப்பவர்கள் திமிரையும் ஆணவத்தையும் கொண்டிருப்பார்கள். ஆனால் 40 ஆண்டிற்கும் மேலாக இத்துறையில் வெற்றியோடு இருக்கும் ரஜினி அனைவரிடமும் பந்தா இல்லாமல் அன்பாகவே பழகுகிறார். ரஜினி தான் எனக்கு ஒரு ரோல் மாடல். அவரை எனது வாழ்க்கை முழுவதும் பின்பற்ற வேண்டும் என்று எண்ணுகிறேன்.
தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் ஆர்வமுடனும் சிரத்தையுடனும் நடித்தார். அவரது சினிமா பயணத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்படத்தின் சண்டைக்காட்சிகள் பிரம்மிப்பை ஏற்படுத்தும். படப்பிடிப்பின் போது ரஜினியின் காட்சிகளைக் கண்டு அனைவரும் விசில் அடித்து மகிழ்ந்தோம்’ என்றார்.