சென்னை:தமிழ், மலையாள சினிமாவில் பிரபல நடன இயக்குநராக இருந்தவர் கூல் ஜெயந்த். இவரது இயற்பெயர் ஜெயராஜ். 1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படத்தில் முதன்முதலாக நடன இயக்குநராக அறிமுகமானார்.
அப்படத்தில் இடம்பெற்ற ‘முஸ்தஃபா’, ‘கல்லூரிச் சாலை’ போன்ற பாடலுக்கு கூல் ஜெய்ந்த் நடனம் அமைத்தார். அதன் பின் அஜித்தின் 'வாலி' படத்தில் இடம் பெற்ற 'ஏப்ரல் மாதத்தில்' பாடல், விஜய்யின் 'குஷி' படத்தில் 'மொட்டு ஒன்று', 'பிரியமானவளே' படத்தில் 'வெல்கம் பாய்ஸ்' போன்ற பல பாடலுக்கு கூல் ஜெயந்த் நடனம் அமைத்துள்ளார்.
கூல் ஜெய்ந்த் முன்னதாக பிரபு தேவா, ராஜு சுந்தரம் ஆகியோரின் நடனகுழுவில் பணியாற்றியுள்ளார். பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த கூல் ஜெயந்த் மலையாளத்திலும் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் கூல் ஜெயந்த் இன்று காலை (நவம்பர் 10) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது. இவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நேரம் வந்துவிட்டது... சகாப்தம் அழைக்கிறது - ட்வைன் ஜான்சனுக்கு தூதுவிட்ட வின் டீசல்