சென்னை: சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் தனது ஆதரவாளர்களைத் திரட்டி புதிதாகத் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற சங்கத்தை தொடங்கியுள்ளார்.
இதையடுத்து இன்று (டிச. 07) நடைபெற்ற தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் டி. ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவிவரும் விபிஎஃப் கட்டணம் தொடர்பான சிக்கல்களை முழுமையாகத் தீர்க்க வேண்டும். விபிஎஃப் கட்டணங்களை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும்.
க்யூப் மற்றும் இதர சர்வீஸ் புரோவைடர் நிறுவனங்களிடமிருந்து தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை அந்த நிறுவனங்கள் உடனடியாகத் திருப்பித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி க்யூப் மற்றும் சர்வீஸ் புரோவைடர் நிறுவனங்களுடன் சுமுக பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டோம்.
![Cube Fee: tamilnadu moviemaker sangam to hold an attention struggle](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-tr-press-meet-script-7205221_07122020140145_0712f_1607329905_1035.jpg)
இதற்கு அந்நிறுவனங்கள் செவிசாய்க்காத காரணத்தால், படத்தை திரையிடுவதற்கான சர்வீஸ் கட்டணம் ரூ.1,500 தவிர வேறு எந்தக் கட்டணமும் செலுத்த இயலாது எனவும், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் இனி விபிஎஃப் கட்டணத்தைச் செலுத்த இயலாது எனவும் தீர்மானம் மேற்கொண்டுள்ளோம்.
வட இந்திய நிறுவனங்களுக்கு விபிஎஃப் கட்டணம் வாங்கிக் கொள்ளாமலே படத்தை திரையிட வழி செய்யும்போது தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும் பாகுபடுத்தி எங்களைப் பழிவாங்குவது நியாயமல்ல" என்றார்.
மேலும் பேசிய அவர், மேற்கண்ட பிரச்சினைகளுக்கு ஒருவார காலத்திற்குள் தீர்வு எட்டப்படவில்லை எனில், கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்பு