சூர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் அனைவரிடமும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த அநீதியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பொதுச் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் பாராட்டிவருகின்றனர்.
இத்திரைப்படம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, "ஜெய்பீம் திரைப்படம் - வழக்கமான சினிமாக்கள் போல சண்டைக் காட்சியும், காதல் காட்சிகளும் கொண்டதாக இல்லை. கதைதான் நாயகனாக அமைந்திருப்பது பாராட்டிற்குரியது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள ராசாக்கண்ணு லாக்கப் படுகொலை வழக்கில் நீதிநாயகம் சந்துரு நடத்திய போராட்டமும், மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களும் கதையின் ஊடாக இயல்பாக பதிவாகியுள்ளன.
அந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சி தலையீடு செய்தபோது, சட்டப்போராட்டத்தை எப்படி முன்னெடுக்கலாம் என ஆலோசித்தோம். சந்துருவை அணுகலாம் என ஆலோசனையை நான் முன்வைத்ததும், அது பொருத்தமான ஒன்றாக அமைந்ததும் நினைவில் நிழலாடுகிறது.
தோழர் சந்துருவுடன், இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவருக்கு அந்த களத்தில் உருவான சமூகப் பார்வைதான், சட்டக் களத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து மனித உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்க அடிப்படையாக அமைந்திருந்தது.
தொடரும் காவல்நிலைய படுகொலைகளுக்கு எதிரான உணர்வினை வலுப்படுத்துவதாக ஜெய்பீம் திரைப்படத்தின் வெற்றி அமைந்திட வேண்டும்". இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Actor Suriya Reply:'ஜெய் பீம்' குறித்து வாயைத் திறந்த ஹெச். ராஜா: பங்கம் பண்ணிய சூர்யா!