பிக் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் படம் 'கிளாப்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் இன்று நடிகர் ஆதியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் படத்தின் இரண்டாவது லுக்கை வெளியிட்டனர்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் படம் குறித்து கூறுகையில், "நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் பிரித்வி ஆதித்யா ஆகியோர் அர்ப்பணிப்போடு பணிபுரிந்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
ஆதி இப்படத்திற்காக கடும் உழைப்பைத் தந்துள்ளார். ஒரு நிஜ அத்லெட் போலவே அவர் மாறிவிட்டார். மேலும் ஆகான்ஷா சிங், கிரிஷா குருப் இருவரும் தங்களது அற்புதமான பங்களிப்பைத் தந்துள்ளார்கள். படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
இசைஞானி இளையராஜா படத்தின் விஷுவல்களுக்கு உயிர்ப்பான இசையைத் தரவுள்ளார். ஆதியின் பிறந்தநாளான இன்று படத்தின் இரண்டாவது லுக்கை வெளியிட்டதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
புதுமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா கூறுகையில், 'கிளாப்' அத்லெட் ஸ்போர்ட்ஸ் வகை விளையாட்டை அழுத்தமாகச் சொல்லும் முதல் படமாக இருக்கும் என்றார். இந்த வகை படம் இங்கே புதிதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், படத்தின் பெரும்பகுதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர்களாக விளங்கும் நாசர், பிரகாஷ் ராஜ், முனீஸ்காந்த், மைம் கோபி ஆகியோருடன் மேலும் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: கிளாப் தட்ட தொடங்கியது தலைவியின் ஆட்டம்!